Tamilnadu Assembly Election DMK A.Rasa Baned For Campaign : முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசாவிற்கு 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 26-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக துணைப்பொதுக்செயலாளரும், முன்னணி தலைவருமான ஆ.ராசா முதல்வர் பழனிச்சாமியின்பிறப்பு மற்றும் அவரது தாய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆ.ராசாவின் இந்த பேச்சு குறித்து வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதிமுகவினர் மட்டுமல்லாது பொதுமக்களும் இந்த கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் திமுகவை சேர்த்த எம்பி கனிமொழி உட்பட சில பெண் தலைவர்களும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், நேராடியாக இல்லாமல், திமுகவினர் பிரச்சாரத்தின் போது கன்னியமான மாண்புடன் நல்ல சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அந்த அறிக்கையில் ஆ.ராசாவின் பெயர் கூட வெளியிடாமல் கூறியிருந்ததது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆ.ராசா, பழனிச்சாமி குறுக்கு வழியில் முதல்வர் ஆனவர், ஆனால் ஸ்டாலின் நேர் வழியில் அரசியலுக்கு வந்தவர் என்று தான் நான் கூறினேன் இதனை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல என்று தனது பேச்சுக்கு விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் அதிமுகவினர், முதல்வர் குறித்து அவதூராக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை திருவெற்றியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, தனது தாய் குறித்து அவதூராக பேசிய ஆ.ராசாவிற்கு அறைவன் தக்க தண்டனை வழங்குவார் என்று கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். மேலும் ஆ.ராசாவின் இந்த பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான அறிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்ட்டது.
இந்த அறிக்கை குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதால் ஆ.ராசாவிற்கு பிச்சாரம் செய்ய 2 நாட்கள் (48 மணி நேரம்) தடை விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆ.ராசாவின் பெயர் திமுக பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் பிரச்சாரத்தில் இனி அநாகரீகமாகவோ, ஆபாசமாகவோ, பெண்களின் கன்னியத்தை குறைக்கும் வகையிலே பேசக்கூடாது என்று ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைய உள்ள இன்னும் 3 நாட்களே (ஏப்ரல் 4) ஆ.ராசாவிற்கு 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil