தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கினைப்பானர் ஒ.பன்னீர்செல்வம் போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் 70% சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர்கள் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் திமுக கட்சி 6-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் அரியணையில் அமர உள்ளார். இதனால் அவருக்கு பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக ஒருங்கினைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம் மு.க.ஸ்டாலினுக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பதிவிலும் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ள ஒ.பன்னீர்செல்வம், தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக கோலாற்றிய கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்களும் இல்லாத இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில், திமுக வெற்றிக்கு அதிமுக தலைவர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil