Tamilnadu Assembly Election 2021: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏக்களின் திடீர் அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் பாஜக 23 தொதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், அதிமுக 171 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதனைத் தொடர்ந்து 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், பல புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏக்கள் பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பல தொகுதிகளில், அதிமுகவின் புதிய வேட்பாளர்களை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர். ஆனாலும் அதிமுக தலைமை தனது முடிவில் எந்த மாற்றமும் அறிவிக்கவில்லை.
இதில் கோவை மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏவுக்கு சீட் தரவில்லை என அவரது ஆதரவாளர்கள்ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பெருந்துறை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்திற்கு அதிமுக தரப்பு சீட் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், இது குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் கட்சிக்கு எதிராக முடிவெடுத்த அவர், சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால்அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை அறந்தாங்கி தொகுதியில், முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அதிமுக தற்போது சர்வாதிகாரிகள் வசம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை உள்ளூர் கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக அறந்தாங்கி வந்த தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பலகேள்விகள் முன்வைத்தேன். ஆனால் அவர் எந்த கேள்விக்கும் முறையாக அவர் பதில் சொல்லவில்லை.
மேலும் அமமுகவுக்கு சென்று ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் யாருக்கும் தற்போது வாய்ப்பளிக்க வில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால், விராலிமலை முருகன் கோயிலில் தொடங்கி, கோடியக்கரை வரை பொது மக்களிடம் நீதி கேட்டு வாகனப் பிரச்சாரம் செய்ய இருப்பாக கூறியுள்ள அவர், புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தால்,, அதற்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தான் முழுக் காரணம் என்று கூறியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”