TN Assembly Election AMMK Candidate : தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்து தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில், அதிமுக தரப்பில் பாஜக பாமக ஆகிய கட்சிகள் ஒரு அணியிலும், திமுக தரப்பில், காங்கிரஸ் மதிமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மற்றொரு அணியிலும் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில் அதிமுகவிற்கு எதிராக தொடங்கப்பட்ட அமமுக கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தனித்து போட்டியிட்ட நிலையில், தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கூட்டணி முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமமுக கட்சியுடன், ஓவைசி, கோகுல மக்கள் கட்சி, மருதுசேனை சங்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், கோகுல மக்கள் கட்சி, மருதுசேனை சங்கத்திற்கு தலா ஒரு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், அமமுக கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் 15 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேட்பாளர் பட்டியலில், ஸ்ரீரங்கம் தொகுதியில், ஆர் மனோகரன், ராசிபுரம் தனி தொகுதியில், எஸ். அன்பழகன், பாபநாசம் தொகுதியில் அன்பழகன், சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழன், உசிலம்பட்டி தொகுதியில், ஐ.மகேந்திரன், புவனகிரி தொகுதியில் கே.எஸ்.கே.பாலமுருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"