Tamilnadu Assembly Election Congress Vs Bjp : தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநில கடசிகள் முதல் தேசிய கட்சிகள் வரை அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த பொங்கல் தினத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த ராகுல்காந்தி, அதற்கு அடுத்த வாரம் தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடந்து கடந்த வாரம், புதுச்சேரியில், பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி கல்லூரி மாணவர்களுடன் உரையாடினார். இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கேரளாவில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மீனவர்களுடன் நடுக்கடலில் நீச்சல் அடித்து மகிழ்ந்தார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் கல்லூரி மாணவி ஒருவருடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். ராகுலின் இந்த செயலை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, கடலில் நீச்சல் அடிக்கும் ராகுல் தரையில் ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதனால் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கவேண்டும்என்று, பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் தேர்தல் ஆணையத்திறகு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவரது தேர்தல்பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறியதற்காக ராகுல்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"