Tamilnadu Assembly Election 2021 : தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுகவும், கடந்த 2 தேர்தல்களில் விட்ட ஆட்சியை மீண்டும் பிடிக்க திமுகவும் போட்டியிடும் நிலையில், புதிதாக ஆட்சியை பிடிக்க, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி என கட்சிகள் வரிசைகட்டி காத்திருக்கின்றனர். இதில் தேசிய கட்சிகளாக பாஜக அதிமுக கூட்டணியிலும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் களமிறங்கியுள்ளனர்.
தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும், தொகுதிப்பங்கீடு முடிக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் வேட்புமுனுவை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததையடுத்து, இன்று முதல் வேட்பு மனு பரிசீலனை தொடங்கியுள்ளது.
அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார் வேட்பு மனு நிறுத்தி வைப்பு :
இந்நிலையில், இன்று காலை தொடங்கிய வேட்புமனு பரிசீலனையில், மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் வேட்பு மனுவுக்கு அரசு வழக்கறிஞர்கள் முன்மொழியக்கூடாது. இதனால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஆனாலும் அமைச்சர் உதயகுமார் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் அமைச்சர் உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பின் அவரின் வேட்பு மனு ஏற்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 36 மனுக்கள் பரிசீலனை செய்ததில், 32 மனுக்கள் ஏற்றுக்கொண்டதாகவும், 5 மனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் நல்லதம்பி வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட பெயர், வாக்காளர் அடையாள அட்டையிலும் வித்தியாசமாக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்புமனு நிராகரிப்பு :
மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ராஜ்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பூர்த்தி செய்யவேண்டிய படிவத்தில் வேட்புமனு பூர்த்தி செய்ததால் அவரது மனு நிராகரிக்கப்ட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியாக அங்கிகரிக்கப்படாத நிலையில் தேர்தல் அலுவலர்கள் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அலுவலர்களின் இந்த நடவடிக்கை மக்கள் நீதி மய்யம் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து திருவள்ளூர் தொகுதியில் ம.நீ.ம. வேட்பாளர் தணிகைவேல் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியள்ளது.
தொடர்ந்து மதுரவாயில் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம கட்சியின் வேட்பாளர் பத்மபிரியாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மனுவில் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் பெயரை குறிப்பிடாததாலும், வேட்பு மனுவில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் நம்பகத்தன்மை இல்லை என்ற புகார் எழுந்ததையடுத்து வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை தொகுதியில் தர்ணா போராட்டம் :
நெல்லை தொகுதியில் அமமுக, மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருதால் பெரும் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் 41 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதில் 16 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், மற்றவை நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமமுக வேட்பாளர் பாலகண்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதில் 10 நபர்கள் முன்மொழிய வேண்டும் என்ற நிலையில், 8 நபர்கள் மட்டுமே முன்மொழிந்துள்ளதால் அழகேசன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமமுக வேட்பாளர் பால் கண்ணன் பால் கண்ணனின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் 3 பேர் தொகுதி வாக்காளர்கள் அல்ல என்பதால் நிராகரிக்கப்பட்டது. மேலும் இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் மாரியப்ப பாண்டியனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அவர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.