Tamilnadu Assembly Election 2021 : தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைதேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த பிப்ரவரி 11-ந் தேதி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 12 ந்தேதி தொடங்கிய வேட்பு மனுதாக்கல் மார்ச் 19-ந் தேதி நிறைவடைந்த்து. தொடர்ந்து 19-ந் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. இதில் ஒரு சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள எடப்படி பழனிச்சாமி, ஸ்டாலின், டிடிவி தினகரன், கமல்ஹாசன், சீமான் ஆகியோர் தங்களது சொந்த தொகுதியில் இறுதி நாள் பிரச்சாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து காலை வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே திருவான்மையூர் வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்த நடிகர் அஜித் முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்தார்.
தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை பதிவு செய்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக சூர்யா, கார்த்தி, பழம்பெரும் நடிகர் சிவக்குமார் ஆகிய மூவரும் தி.நகர் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாக்களிக்க வருகை தந்துள்ளார். தொடர்ந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது மகனும், சென்னை சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினுடன் வாக்களிக்க செல்லும்முன் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு வாக்களிக்க சென்றார். சென்னை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரில் தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து பேசிய அவர் மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என கூறினார். காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாக்களித்தார்
இந்நிலையில், கம்யூசிஸ்ட் கட்சியின் முத்தரசன், திருத்துறைப் பூண்டி அருகே வேலூர் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்க சென்றார், வாக்கு இயந்திர கோளாறால் 15 நிமிடமாக காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை காரைக்குடி பகுதியிலும், கே.என் நேரு திருச்சி தில்லைநகர் பகுதியிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
தொடர்ந்து சென்னை அண்ணாநகர் தொகுதியில் பாஜக தலைவர் எல்.முருகன் தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சி சிவா திருச்சி வெஸ்ரி பள்ளியிலும், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியிலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.