TN Assembly Election Congress Candidate Issue : தமிழக சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வில் முறைகேடு நடப்பதாக அக்கட்சியின் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் பிரச்சாரம், மறுபுறம் வேட்பாளர்கள் அறிவிப்பு என பலகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி தொகுதி உட்பட சில தொகுதிகளில் பாஜக காங்கிரஸ் கட்சி நேரடியாக மோதும் சுழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவு அல்லது நாளை அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பே இது தொடர்பான போராட்டம் வலுக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தேர்வில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு சென்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில், மூன்று கோஷ்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பதற்றம் நீதித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியில் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். தொண்டர்கள் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள், நியாயத்தின் குரலை கேட்க தயாராக இல்லை. இதில் தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல் தன்னை நம்பிய தலைவர்களுக்கும் துரோகம் செய்து வருகின்றனர் என்று தனது சொந்த கட்சியையே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஜோதிமணி தனது பேஸ்புக் பக்கத்தில்,
காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.
எனது தலைவர் ராகுல்காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு.
இந்தியாவின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கட்சியில் இருந்து விலகி மற்ற கட்சிகளில் இணைந்து வரும் நிலையில், கட்சியின் எம்பி ஒருவர் தனது கட்சியை கடுமையான விமர்சனம் செய்துள்ள இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியை களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். @KS_Alagiri @dineshgrao
— A Gopanna (@AGopanna) March 13, 2021
இந்நிலையில் ஜோதிமணியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மீடியா பிரிவின் தலைவரான கோபண்ணா தனது ட்விட்டர் பதிவில், ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை கலங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு்ளளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”