தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதை அடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு ஆதரவாக, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், எ.வ.வேலு வாக்களர்களுக்கு பண பட்டுவாடா செய்து வருவதாக வருமான வரித்துறையினருக்கு தொலைப்பேசியில் ரகசிய தகவல் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.வ.வேலுவுக்கு சொந்தமான பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி, சுமார் 20 மணிநேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், பண பட்டுவாடா தொடர்பான சில ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படியில் 10 வருமான வரித்துறையை சார்ந்த குழுக்கள் சோதனையில் ஈடுபட்ட வந்த நிலையில், தற்போது, 80 பேர் அடங்கிய 16 குழுக்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் நேற்று மாலை நிலவரப்படி, கணக்கில் வராத பணமாக 3.5 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த பத்து தினங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை தொடர்பான தகவல்கள் அடங்கிய மடிக்கணிணியை கைப்பற்றிய வருமான வரித்துறையினர், அந்த தகவல்களை பதிவிறக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சோதனை நிறைவடைந்த பின்னரே முழுமையான தகவல்கள் தெரிய வரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரி உள்பட நான்கு தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக எம்பி. டி.கே.எஸ்.இளங்கோவன் எழுதிய கடிதத்தில், ‘சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறையினரின் அதிரடியான சோதனை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், வேட்பாளரான எ.வ.வேலுவுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், அவரை சில தினங்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலே நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நடைபெற்று வரும் சோதனையின் சுமார் மூன்று கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவிவரும் செய்தி, கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் வருத்தம் அளிக்கிறது. தேர்தலுக்காக தன்னாட்சி நிறுவனமான வருமான வரித்துறை பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தன்னாட்சி நிறுவனமான தேர்தல் ஆணையம் இதை கட்டுப்படுத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”