Assembly Election DMK Alliance Congress : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல்கட்சிகளும், இந்த தேர்தலுக்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக தரப்பில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் என மொத்தம் 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திமுக ஒதுக்குவதாக கூறிய தொகுதிகள் போதுமானதாக இல்லை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.
தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில், தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக - மதிமுக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இந்த முறை குறைந்த தொகுதிகளே கிடைக்கும் என்று என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை இழுபறி இல்லாமல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும், திமுக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது.
இதில் திமுக 40 தொகுதிகளுக்கு மேல் கேட்பதாக கூறப்படும் நிலையில், திமுக தரப்பில் 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை இன்றுடன் முடிக்க திமுக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விருப்பமனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்கானல் முடிந்த பிறகே திமுகவுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதில் திமுக கூட்டணியில் முதன் முதலாக காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 25-ந் தேதி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள்வரை கேட்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் 24 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனால் திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் முடிந்த பிறகே பேச்சுவார்த்தை என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் சத்யமூர்த்தி பவனில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நாளை வரை இந்த நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இன்றுடன் தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி செய்யதிட்டமிட்டிருந்த திமுக அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.