Tamilnadu Assembly Election Exit Poll Results Tamil News : கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் தொடங்கியது. இதில், கடந்த 6-ம் தேதி தமிழகம் கேரளா, மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2-ந் தேதி எண்ணப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணுவதற்கான முதற்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக 5 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் திமுக கூட்டணி முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியிலும், அமமுக வேட்பாளரான டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், நாம் தமிழர் வேட்பாளரான சீமான் திருவெற்றியூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாக பல கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால், தேர்தலுக்குப் பின் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்து. மேற்குவங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று வரை நடைபெற்றதால்தான் இந்தத் தடை. நேற்று மாலை 6.30 மணியோடு மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இரவு 7.30 மணிக்குத் தேர்தலுக்குப் பின் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது.
இதில் தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்கிற தந்தி டிவி எக்ஸிட் போல் பிரேத்தியேக முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 133 இடங்களில் வெற்றிவாகை சூட வாய்ப்பிருப்பதாகவும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 68 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமிருக்கும் 33 தொகுதிகளில் இதர கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil