தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குப்பதிவுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதில் தேர்தலுக்கு முன்பே பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய கொண்டு சென்ற பணம் தேர்தல் பறக்கும் படடை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
மேலும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து கட்சி பிரமுகர்களும் பிடிப்பட்டனர். ஆனாலும் பல தொகுதிகளில் வாக்களார்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் ஒரு கட்சி மற்ற கட்சியை குறைகூறுவது தொடர்ந்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உட்பட தமிழகத்தின் 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகரியை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டு ஓட்டு வாங்க நினை்க்கும் திமுக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திருமங்கலம் பார்முலாவை செய்ய பார்க்கிறது. இதில் அதிமுகவின் வெற்றியை பறிக்க திமுக பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க முயற்சிக்கிறது. இதற்காக கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளில், சுய உதவி குழுக்கள் மூலமும், நவின தொழில்நுட்பமான கூகுள்பே மூலமும் திமுக பணப்பட்டுவாடா செய்கிறது. இந்த தொகுதிகளிலும், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடவடிக்கை எடுத்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எந்த ஒரு பிரச்சாரமும் செய்யக்கூடாது என்பது தேர்தல் விதி. ஆனால் திமுகவின் தொலைக்காட்சியில் மணிக்கு ஒருமுறை ஸ்டாலினின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதில் அதிமுக சார்பில் குறிப்பிட்டுள்ள 5 தொகுதிகளான கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினும், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும், காட்பாடி தொகுதியில் துறைமுருகனும், திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலுவும், திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேருவும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil