Tamilnadu Assembly Election Independent Candidate Election Announcement : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் தேர்தல் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் கடந்த 3 மாதங்களாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளுங்கட்சி முதல் எதிர்கட்சி வரை அனைத்து கட்சிகளும், தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள நிலையில், மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பு முன்னணி கட்சிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில், எம்எல்ஏ ஏஸ்.எஸ் சரவணனும், திமுக சார்பில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் போட்டியிடுகிறார். இவர்களை எதிர்த்து மற்ற கட்சி வேட்பாளர்களும், பல சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கியுள்ள நிலையில், அவர்களில் தற்போது மக்கள் மத்தியில் அதிக பாப்புலராகியுள்ளவர் துலாம் சரவணன். 10 வகுப்புவரை படித்துள்ள இவர், உள்ளூர் செய்தி நிருபர், மார்கெட்டிங் என பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது குப்பை தொட்டி சின்னத்தில் போட்டியிடும் இவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைதான் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
உலக அரசியல் வரலாற்றில் பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களை கவரும் வகையில் பலவகையான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்துள்ளன. ஆனால் இதுவரை எந்த அரசியல் கட்சியும் அறிவிக்காத வகையில், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள துலாம் சரவணன், தான் வெற்றி பெற்றால்,தொகுதி மக்களை நிலாவுக்கு அழைத்துச்செல்வேன், நீச்சல் குளத்துடன் 3 மாடி வீடு, மக்களின் வங்கி கணக்கில் ஒருகோடி பணம், வீட்டுக்கு ஒரு சிறிய ஹெலிகாப்டர், தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், தொகுதியில் தண்ணீர் வழித்தடம் அமைத்து வீட்டுக்கு ஒரு படகு, தொகுதியில் உள்ள பெண்கள் திருமணத்திற்கு 1000 சவரன் நகை, என தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புகள் மதுரை தெற்கு தொகுதியை கடந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்புகள் குறித்து விளக்கம் அளித்துள்ள துலாம் சரவணன் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனஇ ஆனால் அந்த அறிவிப்புகள் நிறைவேற்றினார்களா என்று கேள்விக்குறிதான். அரசியல் கட்சிகளின் அறிவிப்புகள் மக்கள் சிந்திக்க வேண்டும். சாதாரணமாக அறிவிப்பு வெளியிட்டால், யாரும் திரும்பி பார்க்கமாட்டார்கள், அதனால் தான் இப்படி அறிவித்துள்ளேன். தோதலில் வெற்றி பெற்றால் இதில் சாத்தியக்கூறுகைள் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் சாத்தியகூறுள்ள அறிவிப்புகள் வெளியிட்டாலும், சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மீம்ஸ் மூலம் காலாய்த்து வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதிரி அறிவிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதா, அல்லது தேர்தல் அறிக்கைகள் வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது மக்கள் மத்தியில் எழும் பெரும் கேள்வியாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"