Tamilnadu Assembly Election 2021 : சென்னையின் முக்கிய சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகை ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார். திமுக சார்பில் த.வேலு போட்டியிடுகிறார். அதிமுக சார்பில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ் போட்டியிடுகிறார். அதனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதி மேலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி, 2018ல் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியபோது, அக்கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக நடிகை ஸ்ரீபிரியாவும் இணைந்தார். அவ்வப்போது, ஊடகங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கருத்துகளையும் தெரிவித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரீபிரியா திரைத்துறையில் இருந்து கமல்ஹாசனுக்கு முதல் ஆதரவு குரல் கொடுத்தார். மக்களவைத் தேர்தலின்போது, மநீம வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரமும் செய்தார். இந்த சூழலில்தான், நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று வாக்காளர்களுடன் சகஜமாக பேசி வாக்கு சேகரித்தார். ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியில் கடைக்காரர்களிடம் சென்று வாக்கு சேகரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
மநீம சார்பில் ஸ்ரீபிரியா போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும்? மயிலாப்பூர் தொகுதி வாக்காளர்கள் மற்றும் இதுவரையிலான தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு அலசல் பார்வை இங்கே.
மயிலாப்பூர் தொகுதி பெரும்பாலும் பிராமணர்கள், மேல்தட்டு வகுப்பினர் அதிகம் நிறைந்த பகுதியாக அறியப்பட்டாலும் அதனுடைய முகம் மாறி வந்துள்ளது. தற்பொது, பிராமணர்கள் மேல்தட்டு வகுப்பினர் மட்டுமல்லாமல், தலித்துகள், நடுத்தர மக்கள் என பல்வேறு பிரிவு மக்களும் வசிக்கின்றனர்.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை திமுக 5 முறையும் அதிமுக 6 முறையும் காங்கிரஸ் 2 முறையும் ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும், பாஜக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2006ம் ஆண்டு முதல் மயிலாப்பூர் தொகுதியை தொடர்ந்து அதிமுக தக்கவைத்து வந்துள்ளது.
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ், வெற்றிப் பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அவரே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த முறையும் வெற்றி பெறுவாரா? அல்லது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது திமுக வேட்பாளர் த.வேலு வெல்வாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பாக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று மயிலாப்பூர். அதே நேரத்தில், மநீம-வுக்கு அதிக வாக்கு சதவீதம் நகரத்தில் உள்ளது என்ற நம்பிக்கயிலும் பிரபலமான நடிகை ஸ்ரீபிரியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாலும் மநீம கட்சியினர் மயிலாப்பூர் தொகுதி மீது நம்பிக்கையில் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல, 10 ஆண்டுகளாக மயிலாப்பூர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்தவரே எம்.எல்.ஏ-வாக இருப்பதால் இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என திமுகவை தேர்வு செய்வார்கள் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், மயிலாப்பூர் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ் முயற்சிக்கிறார். மற்றொரு பக்கம், பலம் வாய்ந்த திமுக வேட்பாளர் த.வேலு கடும் போட்டியாளராக இருக்கிறார். பிரபல நடிகையாக ஸ்ரீபிரியா மக்களிடையே சகஜமாக இறங்கி வாக்கு சேகரிக்கிறார். அதனால், மயிலாப்பூர் தொகுதி யாருக்கும் சாதகமாக அமையும் என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகளே சரியான விடையளிக்கும். அதுவரை, எல்லாம் வெறும் யூகங்களாகவே இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.