தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. 234 தொகுதிகள் கொரோனா தமிழக சட்டசப்பேரவையில், 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் 150க்கு மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டது.
கடந்த 10 ஆண்டகளாக தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட அதிமுக ஹாட்ரிக் வெற்றி நோக்கி களமிறங்கியது. ஆனால் மக்களின் தீர்ப்பு திமுக பக்கம் சென்றதால் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரபலஙகள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக தொண்டர்கள் கொரோனா பாதிப்பையும் மறந்து மகிழ்ச்சியைகொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பல ஐஏஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் டிஜிபி திரிபாதி, ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சங்கர் மற்றும ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளனர். தொடர்ந்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மலர்க்கொத்தோடு ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.
மேலும் உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பத்திரப் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதுல்ய மிஸ்ரா, கார்த்திகேயன், சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வருகின்றனர்.