Assembly Election 2021 Puthiya Thamizhakam Party : தமிழக சட்டசபை தேர்தலில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தனித்து போட்டியிடுவதாக அறிவித்து முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாள்தோறு்ம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த தேர்தலில் முன்னணி கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது பல இழுபறிகள் ஏற்பட்டது. இதில் ஒரு சில கட்சிகளுடன் அதிருப்தியுடன் தலைமை கொடுத்த தொகுதிகளை பெற்றுக்கொண்ட நிலையில், சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அதிகரித்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளில் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிருப்பதியடைந்த ஐஜேகே திமுக கூட்டணியில் இருந்து விலகியது. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட இழுபறி காரணமாக சரத்குமார் தலைமையிலான சமத்துவமக்கள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது. தற்போது இந்த இரு கட்சிகளும் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி தமிழக தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்து முதற்கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டாப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு ஒட்டாபிடாரம் தொகுதியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் மீண்டும் வெற்றிவாகை சூடிய நிலையில், தற்போது 3-வது முறையாக ஒட்டாபிடாரம் தொகுதியில் களமிறங்குகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"