Tamil Nadu Election Results News : சினிமாவில் கோலோச்சிய எம்.ஜி.ஆர்., அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்த முதல் தமிழ் சினிமா நட்சத்திரம் என்பதே வரலாறு. 1972-ல் அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்து, 1978-ல் முதல் முறை ஆட்சி அமைத்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, 1989 வரை அவரே பதவியல் இருந்து மறைந்தார். எம்.ஜி.ஆர்-க்கு பிறகாக அந்த வரிசையில் ஜெயலலிதா பிடித்தார். அரசியலில் ஈடுபட்டால், ரஜினிகாந்த் கனிசமான வாக்குகளை வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் பிரவேசத்திற்கு முழக்கு போட்டுவிட்டார்.
வரலாறுகள் ஒரு புறமிருக்க, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக களம் கண்டனர். சினிமா நட்சத்திரங்கள் நிரம்பிய பிரசாரக் களம் அனல் பறந்தது என்றே சொல்லலாம். கமல்ஹாசன், குஷ்பு, ஸ்ரீபிரியா, சினேகன், மயில்சாமி என பல திரையுலக நட்சத்திரங்கள் தேர்தல் களம் கண்ட போதிலும், யாராலும் வெற்றிக் கனியை சுவைக்க முடியவில்லை என்பது பெரும் சோகம்.
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் :
ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை நிரப்புவதற்காக அரசியலில் பிரவேசம் செய்தவர் கமல்ஹாசன். அரசியலில் ஈடுபடுவதற்காக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அதிரடியாக தொடங்கி, முதல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லை. அதேபோல, வாக்கு எண்ணிக்கை நாளான நேற்றும் அதே பரபரப்பு தான்.
தபால் வாக்குகள் தொடங்கி, ஏறத்தாழ 8 சுற்றுகளில் முன்னிலையில் இருந்த கமல்ஹாசன், அதன் பின், இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் முன்னும் பின்னுமாக கமல்ஹாசனும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் முன்னிலை வகித்து வந்தனர். கமல்ஹாசன் வெற்றி என்ற நிலை வந்து, சிறிது நேரத்திலேயே, வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தொகுதியில் வெற்றி உறுதி என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. கமல்ஹாசன் 51,087 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளர். கமல்ஹாசன் 1,439 என்ற மிகவும் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு :
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் எழிலன் களம் கண்டார். பாஜக வின் தேசிய தலைவர்களான அமித் ஷா உள்பட பல நட்சத்திர தலைவரக்ளும் குஷ்புவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, குஷ்பு பின்னடைவு என்ற நிலையே இருந்து வந்தது.
பாஜக வேட்பாளர் குஷ்பு, 38,493 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார். அதே சமயம், திமுக வேட்பாளர் எழிலன், 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் 71,537 வாக்குகளுடன் வெற்றி வாகை சூடியுள்ளார்.
மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா :
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார் நடிகை ஸ்ரீபிரியா. இந்நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. திமுகவை சேர்ந்த மயிலை. த. வேலு, அதிமுகவை சேர்ந்த நட்ராஜ் ஆகியோரை எதிர்த்து களம் இறங்கிய ஸ்ரீபிரியா வாக்கு எண்னிக்கை தொடக்கம் முதலே பின்னடைவை சந்தித்தார். அவர் 14,904 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். தொகுதியில் அவர் 9% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் எழிலன், 67919 வாக்குகளுடன் வெற்றிப் பெற்றுள்ளார்.
விருகம்பாக்கத்தில் சினேகன் :
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மநீம நட்சத்திர வேட்பாளராக களம் இறக்கியவர் கவிஞர் சினேகன். தொடக்கம் முதலே பின்னடைவைச் சந்தித்து வந்த சினேகன், இறுதியில் 16,871 வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இருப்பினும், தொகுதியில் அவர் 10.2% வாக்குகளை தொகுதியில் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 73,814 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சுயேட்சையாக விருகம்பாக்கத்தில் காமெடி நடிகர் மயில்சாமி :
விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக களம் கண்டார் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. வாக்கு எண்ணிக்கையின் மாலை 4 மணி நிலவரப்படி, சுமார் 50 வாக்குகளை மட்டுமே பெற்று மயில்சாமி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தார். இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில் இறுதியில், 4 தபால் வாக்குகள் உள்பட, 1436 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil