Tamilnadu Assembly Election 2021 : வரும் சட்டசபை தேர்தலில் தங்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறள்ளது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், பெரிய கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன. தொடர்ந்து கூட்டணி கட்சிகள், தங்களது தலைமையின் சின்னம் மற்றும் சொந்த சின்னத்திலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய ஜனநாயக கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து போட்டியிடுகின்றன.
இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தங்களுக்கு பொதுச்சின்னம் வழங்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. மேலும் தமிழக தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நேற்று அறிவிப்பை வெளியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி நேற்று முதற்கட்டமாக 60 வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து தங்களுக்கும் பொதுச்சின்னம் வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் மனுதாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக 3 நாட்கள் விசாரணை நடத்தியது. இதில், ஏற்கெனவே கொடுத்த மனுவில் சில குறைபாடுகள் இருந்ததால் தேர்தல் ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது. அந்த மனுவை திருத்துவதற்கான விதிகள் இல்லாததால் புதிய மனுவை இன்றே கொடுக்க வேண்டும் என ஐ.ஜே.கேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனுக்கள் மீது நாளைக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், சமத்துவ மக்கள் கட்சியும், புதிய தமிழகம் கட்சியும் பொதுச்சின்னம் கோரிய வழக்கில் இன்றைக்கு புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நாளைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"