TTV Dinakaran Meet DMDK Vijayakanth in Party Office : தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவையும் அதிமுகவையும் வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில், நாளுக்குநாள் தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அம்முக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தொகுதி ஒப்பந்தம் செய்யப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில்,
“தீய சக்தியான திமுகவையும், துரோக கட்சியான அதிமுகவையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே கொள்கை. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை, நல்லாட்சியை, வெளிப்படையான ஆட்சியை உருவாக்கி தருவதற்கான கூட்டணிதான் இது. சசிகலாவின் ஆதரவு எங்களுக்கு உண்டு” எனத் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"