நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும் 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டுமே தனித்து 125 தொகுதிகளில் வென்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 6-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இல்லாத நிலையில், திமுகவின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதல்வர் அரியணையில் அமரவுள்ளார். இதற்கான அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த உடனே கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், ஸ்டாலின் அப்போதே அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியானது. குடும்பத்துடன் கொடைக்கானல் சென்ற அவர் அங்கு வைத்து பட்டியலை இறுதி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி இளம் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யார் யாரை அமைச்சராக்குவது என்பது குறித்து தீவிர தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்டாலின் வரும் 7-ந்தேதி முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக அவருடன் சேர்ந்து 32 அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.
இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக முக்கிய நிர்வாகி உருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அமைச்சர்கள் பட்டியலில், மூத்த தலைவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள், பெண்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள், என அனைத்து தரப்பினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த அமைச்சரவை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் கருணாநிதி அமைச்சரவையில் ஒருமுறை நியமித்த அமைச்சரை அந்த ஆட்சி முடியும் வரை அவரை மாற்றமாட்டார். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் துறை மாறுமே தவிர அமைச்சர் பதவி மாற வாய்ப்பில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலையை உடைக்க ஸ்டாலின் எண்ணுவதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலும் கருணாநிதி அமைச்சரவையில் இருந்த துரைமுருகன் சட்டத்துறை அல்லது பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ம.சுப்ரமணியன் சபாநாயகராகவும் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், எம்ஆர்கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஆ.தமிழரசி, க.ராமச்சந்திரன், கு.பிச்சாண்டி ஆகிய மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சரவையில் இடம் அங்கம் வகிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதில் முதல் தேர்தலில் முத்திரை பதிக்கும் வெற்றியை பெற்ற திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் அடியிலேயே அமைச்சர் பதவிக்கும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அவர் முதல் 2 ஆண்டுகள் அமைச்சரவை பட்டியலில் இடம்பிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது சினிமா துறையில் உள்ள உதயநிதி ஒரு சில படங்களில் நடித்து வருவதால், அந்த படங்களை முடித்துவிட்டு வருமாறு ஸ்டாலின் கூறுவதாக ஒரு தகவல் இருக்கிறது.
மற்றபடி அர.சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் நா.எழிலன், அ.வெற்றி அழகன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து தேர்தலில் வென்றுள்ள வி.செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, ராஜ கண்ணப்பன், சு.முத்துசாமி, எஸ்.ரகுபதி ஆகியோரில் ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
துரைமுருகன், அர.சக்கரபாணி ஆகியோரின் பெயர்கள் இதில் பேரவைத் தலைவராக பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil