Tamilnadu Assembly Election PM Modi Campaign : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி திருப்பூர் தாராபுரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாராபுரத்தில் ஏற்பாடு செய்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வெற்றிவேல் வீர வேல் என்று தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து தமிழர்களின் இந்த பழமையான பகுதிக்கு வந்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். மிகச்சிறந்த மனிதர்களான திருப்பூர் குமரன், காளிங்கராயர், தீரன் சின்னமலை, தளபதி கொல்லன் போன்ற மிகச் சிறந்த மனிதர்களை உருவாக்கிய இந்த பகுதி, நினைத்து இந்தியா பெருமைக் கொள்கிறது”
திமுக காங்கிரஸ் கூட்டணி காலாவதியான 2ஜி ஏவுகனையை ஏவியுள்ளது. அவர்களின் தாக்குதல் பெண்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது. திமுக வாரிசு அரசியலில் மூழ்கியுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமைகள் அவர்களின் தலைவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். தமிழக மக்கள் பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுக்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். முதல்வரின் தாய் குறித்து அவதூறாக பேசிய அவர்கள், ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களையும் அவதூறாக பேசுவார்கள்.
1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் திமுகவினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தவறாக நடந்துகொண்டனர். இப்போது அக்கட்சியை சேர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி, ஆ.ராசா உள்ளிடோர் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துகளை கூறி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த திமுக தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். உழவர்களை உலகம் பின்பற்ற வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. சிறு விவசாயிகளின் நலன்களை காப்பதே மத்திய அரசின் நோக்கம். விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வோம் பெண்களின் கண்ணியத்தை காக்க மத்திய அரசு கிராமப்புறங்களில் கோடிக்கணக்கான கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளது. உலகம் முழுவதுக்குமான பொம்மை உற்பத்தி கேந்திரமாக தமிழகத்தை மாற்ற திட்டமிட்டு உள்ளோம் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.