Tamilnadu Assembly Election 2021 : திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்ததை நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் ஒரு பக்கம் பிரச்சாரங்கள் தொடர்ந்து வரும் நிலையில், மறுபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக திமுக தரப்பில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொகுதிப்பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மொத்த 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விசிக 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, மமக 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"