தேர்தலுக்கு முன்னர், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்கள் மட்டுமே வழங்க முடியும் என்று திமுக காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் கூட்டணியில் இருந்து வெளியேறி விடலாம் என்று சலசலப்புகள் தொடங்கின. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர், திமுக உடனான கூட்டணி உறுதியானது என்றும், மூன்றாவது அணி அமைப்பது பற்றி ஒருபோதும் யோசிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார். இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் தங்களது கூட்டணிக்கு வருமாறு நேரடியாகவும் மறைமுகமாகவும் அழைப்பு விடுத்தார்.
ஆனால் காங்கிரஸ்க்கு குறைவான இடங்கள் ஒதுக்குவதால் திமுகவையும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அந்த தேர்தலில் திமுகவும் 22 தொகுதிகளில் மட்டுமே வென்று எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் 89 இடங்களில் திமுக வென்றது. இந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் வழங்கப்பட்டது. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்கள் ஒதுக்கியிருந்தால் திமுக ஒருவேளை ஆட்சிக்கு வந்திருக்கலாம் என பேசப்பட்டது. 2016 ல் ஆட்சிக்கு வருவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை திமுக இழந்துவிட்டது. கடந்த ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் பெரிய வெற்றியை பெற முடியவில்லை..
திமுக காங்கிரஸ் என இரு தரப்பிலிருந்தும் முக்கிய தலைவர்கள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இறுதியாக திமுக 25 இடங்களை காங்கிரஸ்க்கு வழங்கியது. காங்கிரசும் அதை எந்த முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது. ஏனெனில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்கள் மற்றும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கிய நிலையில் அந்த கட்சிகளை விட அதிக எண்ணிக்கையிலான இடங்களை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றதால் அது திருப்தி அடைந்தது.
இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு முன் உள்ள அடுத்த பெரிய கேள்வி, இந்த முறை வாக்கு சதவிகிதத்தை எவ்வாறு உயர்த்துவது என்பதாகும். ஏனெனில் கடந்தகாலங்களைப் போல் மோசமான செயல்பாடு இருந்தால் மறுபடியும் எதிர்காலத்தில் அதன் பேரம் பேசும் திறன் குறைக்கக்கூடும். எனவே காங்கிரஸ் கட்சியினர் இந்த முறை கவனத்துடன் செயல்பட்டனர்.
தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதில், காங்கிரஸ் தனக்கு ஒதுக்கப்பட்ட 25 இடங்களில், 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் வாக்கு வங்கியையும் உயர்த்தியுள்ளது. எனவே இந்தமுறை, காங்கிரசுக்கு எதிராக புகார் செய்ய திமுகவுக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. 2006 ஆம் ஆண்டுக்கு பிறகான சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் சிறந்த செயல்பாடு இதுவாகும். 2006ல் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 48 இடங்களில் 34 இடங்களை வென்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil