தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற மாநில காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 20,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4420 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை அன்று, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 19 தொகுதிகளுக்கான ஈவிஎம் மெஷிகன்கள் வைக்கப்பட்டுள்ள குயின் மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.
ஆயுதமேந்திய ரிசர்வ் காவல்துறையின் 12 படைகள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்துறையின் 10 படைகள் தவிர 120 காவல் பணியாளர்களைக் கொண்ட ஒரு விரைவான எதிர்வினைக் குழு (கியூஆர்டி) மற்றும் ஒரு விரைவான நடவடிக்கை குழு (எஸ்ஏஜி) ஆகியவை பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், வாக்கும் எண்ணும் மையங்களைச் சுற்றி சோதனைச் சாவடிகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில், திருச்சி உட்பட ஒன்பது மாவட்டங்களில் 41 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, கருர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாதுதுரை ஆகிய மாவட்டங்களுக்கான 13 வாக்கு எண்ணும் மையங்களில் ஐ.ஜி தீபக் தலைமையிலான காவல்துறையினரால் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகர்புற சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஜமால் முகமது பொறியியல் கல்லூரியிலும், பிற தொகுதிகளுக்கு சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
10 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தில், சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் 80 மத்திய ஆயுத போலீஸ் படையினர் (சிஏபிஎஃப்) வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 2,050 காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள். இங்கு நான்கு வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.