தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றியை பெற்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக 126 இடங்களைப் பிடித்துள்ளது.
திமுகவிற்கு எல்லா தேர்தல்களையும் போலவே இந்த தேர்தலிலும் சென்னை மிகப் பெரிய வெற்றியை அளித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதும், சென்னையில் 10 இடங்களை திமுக கைப்பற்றியது. தற்போது 16 தொகுதிகளில் வெற்றி பெற்று சென்னை எப்பொழுதும் திமுகவின் கோட்டை என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் கொளத்தூர் தொகுதியில், திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி வெற்றிபெற்றுள்ளார். உதயநிதியின் முதல்முறையாக போட்டியிட்ட தேர்தலிலே வெற்றி கண்டுள்ளார்.
எழும்பூர் சட்டமன்றத் தொகுதி எப்போதும் போல் திமுக வசமானது. அங்கு திமுகவின் பரந்தாமன் வென்றுள்ளார். அண்ணாநகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை திமுக வேட்பாளர் மோகன் தோற்கடித்துள்ளார்.
துறைமுகம் தொகுதியில் ஆரம்பச்சுற்றுகளில் பாஜகவின் வினோஜ் பி செல்வம் முன்னிலை பெற்றாலும், பின்னர் வந்த சுற்றுகளில் திமுகவின் சேகர்பாபு முன்னிலை பெற்று, தற்போது தொகுதியை கைப்பற்றியுள்ளார்.
முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு, திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் தோல்வியை தழுவியுள்ளார்.
வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா விருகம்பாக்கம் தொகுதியை கைப்பற்றியுள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தனவேலுவிடம் அதிமுக வேட்பாளர் நடராஜன் தோல்வியடைந்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தோல்வியை தழுவியுள்ளார். அங்கு திமுகவின் மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
வேளசேரியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஹசன் மௌலானா, அதிமுக வேட்பாளர் அஷோக் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் பொன்ராஜ் இருவரையும் தோற்கடித்துள்ளார்.
இரண்டு முன்னாள் மேயர்கள் மோதிக்கொண்ட சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவின் மா.சுப்பிரமணியன் வென்றுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளும் திமுக வசமானது. ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தோல்வி அடைந்துள்ளார். மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமினை வீழ்த்தியுள்ளார் திமுக வேட்பாளர் கணபதி. திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அங்கு திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. திருப்பெரும்புதூரில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை வெற்றி பெற்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் தொகுதி தவிர மற்ற ஆறு தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது. மதுராந்தகத்தில் மதிமுகவின் மல்லை சத்யா தோல்வியடைந்துள்ளார்.
இதன் மூலம் சென்னை மட்டுமல்லாமல் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வென்றுள்ளது.
அடுத்ததாக திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளை பிடித்து அசத்தியுள்ளது திமுக கூட்டணி. திருச்சி மேற்கில் கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார். திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கில் தோல்வியை தழுவியுள்ளார். அதேபோல் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீஇரங்கம் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 5ல் திமுக கூட்டணி வென்றுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டுமே விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பாக வென்றுள்ளார்.
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள மொத்தம் 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக கொறடா ராஜேந்திரன் அரியலூரில் மதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுகவும், இரண்டு தொகுதிகளில் அதிமுகவும் வென்றுள்ளது. திருவண்ணாமலை தொகுதியில் திமுகவின் எ.வ.வேலு வெற்றி பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கடலூரில் 7 தொகுதிகளில் திமுக கூட்டணியும் இரண்டு தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில், அமைச்சர் காமராஜ் மட்டுமே நன்னிலம் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற 3 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.
அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மட்டும் வேதாரண்யம் தொகுதியில் வென்றுள்ளார். மற்ற இரு தொகுதிகளும் திமுக கூட்டணி வசமானது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. கரூர் மாவட்டத்திலும் 4 தொகுதிகளையும் திமுக வென்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியை கைப்பற்றியுள்ளார். மற்ற 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வெற்றி பெற்றுள்ளார். மற்ற 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியை தழுவியுள்ளார். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மாவட்டத்தில் மற்ற 6 தொகுதிகளும் திமுக கூட்டணி வசமானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் வென்றுள்ளார். அங்கு போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தோல்வியை தழுவியுள்ளார். மாவட்டத்தில் மற்ற 5 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரமும், நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் காந்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.