தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், முதல்வர் பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக அமைச்சரவை ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 6-வது முறையாக ஆட்சியமைக்க உள்ள திமுக கூட்டணியில், மு.க.ஸ்டாலின் முதல்முறையக முதல்வர் அரியனையில் அமரவுள்ளார். இதற்காக திமுக கூட்டணிக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இழந்த அதிமுக கூட்டணியில் ஒருசில அமைச்சர்களும் தோல்வி தழுவியுள்ள நிலையில், சட்டசபையில் முக்கிய எதிர்கட்சியாக இருப்போம் என்று அதிமுக ஒருங்கினைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், புதிய ஆட்சிக்கு வழிவிடும் வகையில் முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது சொந்த ஊரான எடப்பாடியில் உள்ள பழனிச்சாமி, தனது ராஜினாமா கடிதத்தை .ஃபேக்ஸ் மூலம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பியுள்ளார். அதிமுக இந்த தேர்தலில் தோல்வியை தழவியிருந்தாலும், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த அதிமுகவுக்கு இந்த தேர்தல் முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புதிய முதல்வராக பொறுப்பேற்க திமுக தலைவர் ஸ்டாலின் தயாராகி வருகிறார். ஏற்கனவே தேர்தல் முடிந்தவுடன் கொடைக்காகல சுற்றுலா சென்ற மு.க.ஸ்டாலின் அங்கேயே அமைச்சர்கள் பட்டிலை தயார் செய்துவிட்டதாகவும், இந்த பட்டியலில், கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமல்லாமல், இளம் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வரும் 7-ந் தேதி ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாகவும், அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil