General Election 2019: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் முறையே காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றிருக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
நேற்று (மார்ச்.3) விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, திமுக சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், விசிக தலைவர் திருமாவளவன் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்பின், ‘ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணி நிமித்தம் காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லை’ என செய்தியாளர்களை சந்தித்து திருமா விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், இன்று 2ம் கட்ட பேச்சு வார்த்தையில் விசிக கலந்து கொண்டது. இறுதியில், 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.
இதன்பின் பேட்டியளித்த திருமாவளவன், “போட்டியிடும் தொகுதி இறுதி செய்த பின்பு, வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதால் அந்த கூட்டணிக்கு பலவீனம் தான். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. திமுக சின்னத்தில் போட்டியிடச் சொல்லி அக்கட்சி எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை” என்றார்.
ஆனால், திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. அதற்கு, ‘நான் மட்டும் இதில் முடிவெடுக்க முடியாது. கட்சியினருடன் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன்(கன்வின்ஸ் செய்கிறேன்)’ என திருமாவளவன் தெரிவித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ‘நான் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்’ என திருமா அறிவித்த நிலையில், சிதம்பரத்தை உறுதியாக அவர் பெற்றுவிடுவார் என கூறப்படுகிறது. 2வது தொகுதியாக விழுப்புரம் அல்லது திருவள்ளூரை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் விசிக இணைந்ததைத் தொடர்ந்து,
காங்கிரஸ் – 10
விடுதலை சிறுத்தைகள் – 2
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் – 1
கொங்கு தேசிய மக்கள் கட்சி – 1
என இதுவரை மொத்தம் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு இன்று 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், “திமுக கூறிய தொகுதி எண்ணிக்கை குறித்து நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
நாளை மாலைக்குள் திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.