Marxist Communist Party 6 Seat In DMK Alliance : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்தியா தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருபுறம் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. இதில் திமுக கடந்த ஒரு வாரமாக தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த பேச்சுவார்த்தையின் முதல்படியாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும், இந்தியா கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பலத்த இழுப்பறிகளுடன் நடைபெற்ற திமுக காங்கிரஸ் தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் நேற்று முடிவு எட்டப்பட்டு, தமிழக சட்டபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கடந்த ஒரு வாரமாக தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் முதல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் சுமோக முடிவு எட்டப்படாத நிலையில், 2-வது கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபால கிருஷ்ணன், திமுக கொடுப்பதாக கூறும் தொகுதிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறினார். இதனால் திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நீடிக்குமா என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்தது.
தற்போது இந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் திமுக கூட்டணியில், இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில், திமுக 180 தொகுதிகளில் போட்டியிட்டுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளும், உத்ய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூறி வரும் நிலையில், கூட்டணி கட்சிகள் யார் யார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று விரைவில் தெரிய வரும். இதில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய இரண்டு தொகுதியில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"