Tamil Nadu Election News : தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த, சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி அன்றே அறிவிக்கப்பட உள்ளது. தொடரட்டும் வெற்றி நடையினரின் ஆட்சியா, விடியல் தர காத்திருக்கும் ஸ்டாலினின் ஆட்சியா என்பதை, வாக்கு எண்ணிக்கை நாள் வரும் வரை காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக, வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் தொடர்பான தரவுகள், அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளன.
வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போது, கல்வித் தகுதி, வருமானம், சொத்து விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், கடன் தொகை, குற்றப் பின்னனிகள் என அவர்கள் தொடர்பான முழு தகவல்களும் அடங்கிய தொகுப்பாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வர். இந்த பிரமாணப் பத்திரங்கள் அனைத்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பதிவேற்றப்பட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை பொதுமக்கள் தரவிறக்கம் செய்து, வேட்பாளர்கள் தொடர்பான முழுத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை பொது மக்கள் தரவிறக்கம் செய்யும் போது, அதன் எண்ணிக்கை கணக்கிடப்படும்.
அந்த வகையில், வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரம் பதிவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்த ஒரு ரவுண்ட்-அப் செய்தோம்.
எடப்பாடி தொகுதியில் போட்டியிடும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை, 10,540 பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர்.
போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரமாணப் பத்திரத்தை 3,367 பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும், திமுக தலைவர் ஸ்டாலினின் பிரமாணப் பத்திரமானது, 10,588 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிரமாணப் பத்திரமானது, 3,88,415 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களம் கண்டார். அனல் பறந்த அவரது பிரசாரங்களின் முடிவு, வாக்கு எண்ணிக்கை நாள் அன்று தெரிய வரும் நிலையில், வேட்புமனுவில் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரமானது, 1,86,25,154 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரது பிரமாணப் பத்திரங்களின் பதிவிறக்க எண்ணிக்கையானது, பத்தாயிரத்தை கடக்காத நிலையில், சீமானின் பிரமாணப் பத்திரம் ஒரு கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பது, புதிய சாதனையை படைத்துள்ளது.
சீமானுக்கு அடுத்தப்படியாக, நட்சத்திர அடையாளங்கள் எதுவும் இன்றி தேர்தலில் களம் கண்டுள்ள நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காளியம்மாள், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம், ஸ்டாலின் என நட்சத்திர வேட்பாளர் பட்டாளங்களை வீழ்த்தி முன்னிலையில் உள்ளார்.
நாகப்பட்டினத்தை சேர்ந்த காளியம்மாள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு அரசியல் கவனம் பெற்றார். அந்த தேர்தலில், சுமார் 60 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்தின் இணைய தள பக்கத்தில் இன்று வரை, 7,59,277 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
கோடிகளை கடந்துள்ள சீமானின் பிரமாணப் பத்திர தரவிறக்க எண்ணிக்கையானது, அரசியல் வட்டாரங்களில் காரசார விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.