தமிழகத்தில் திட்டமிட்டதைப் போல 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தேர்தல் வாக்குப்பதிவானது நேற்று நடைபெற்றது. தமிழக மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக 71.79% வாக்குகள் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன. கடந்த காலங்களை காட்டிலும், கொரோனா தொற்று உச்சமடைந்திருக்கும் நிலையில், நடத்தப்பட்ட தேர்தல் என்பதால், தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டது. மாநிலம் முழுவதும் சுமார் 88000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே எழுந்ததை காண முடிந்தது. இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரின் ட்விட்டர் பதிவு, முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழாசிரியையாக பணிபுரியும் சங்கரி பாலா என்பவர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை, ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டுள்ளார். ‘பல மைல்களுக்கு அப்பால், தனியாக அதிகாலை 3 மணிக்கு வாக்குப் பெட்டிகளை பேருந்தில் எடுத்துச் செல்கிறேன். பெண்களை தேர்தல் பணிகளில் அமர்த்தும் தேர்தல் ஆணையம், பணி முடிந்ததும் அவர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்பிச் செல்ல வழிவகை செய்வதில்லை. எங்கள் பணிக்கு பணம் வேண்டாம். பாதுகாப்பு வழங்குக’ என, பதிவிட்டுள்ளார்.
சங்கரி பாலாவின் இந்த பதிவானது, தேர்தல் ஆணையம் தவறவிட்ட செயல்பாடுகளை சுட்டிக் காட்டும் வண்ணம் அமைந்துள்ளதாகவும், நிச்சயம் அடுத்து நடைபெறக் கூடிய தேர்தல்களில் பெண்கள் வெகு தொலைவில் பணி அமர்த்தப்படுவதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil