தமிழக சட்டமன்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது திமுக அதிமுக இடையே தான் போட்டி நிலவுகிறது.
திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னை மண்டலத்தில் இந்த முறையும் திமுகவே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக நட்சத்திர வேட்பாளர்கள் நிறைய பேர் சென்னை மண்டலத்தில் போட்டியிடுகின்றனர். திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். ஆயிரம் விளக்கில் போட்டியிடும் எழிலன் முன்னிலையில் உள்ளார்.
சென்னை மண்டலத்தில் 6 மணி நிலவரப்படி திமுக 36 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் அதிமுக 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதில் சென்னையிலுள்ள 17 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேகர் பாபு தற்போதைய நிலவரப்படி முன்னிலை பெற்றுள்ளார். அங்கு பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
அதேபோல் மேற்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும். ஆனால் இந்தமுறை கருத்துக் கணிப்புகளில் திமுக அந்த பகுதியில் கணிசமான இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தன. ஆனால் வெளிவரும் முன்னிலை நிலவரங்களில் அதிமுகவின் கையே மேற்கு மண்டலத்தில் ஓங்கி இருக்கிறது. அதுவும் இந்த முறை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முதல்வர் வேட்பாளாராக உள்ளதால் மேற்கு மண்டலம் முழுவதையும் அதிமுக கைப்பற்றும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதிமுகவே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர்களும் முன்னிலையில் உள்ளனர்.
மேற்கு மண்டலத்தில் 6 மணி நிலவரப்படி திமுக 20 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம் அதிமுக 31 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் எடப்பாடி தொகுதியில் 92,268 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம் ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி வெற்றி பெற்றுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil