Tamil Nadu Assembly ELection 2021: வரும் சட்டமன்றத் தேர்தளுக்கான தி.மு.க சார்பில் போட்டியிடும் 173 தொகுதிகளின் விவரங்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார் . கூட்டணியில் உள்ள ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். .
திமுக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் தலைவர்களின் வாரிசுகள், மருத்துவர்கள், புதுமுகங்கள், பெண்கள், பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
எம்.சி.ஏ பட்டதாரியான சம்பத் குமார் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரிய அரசியல் பின்புலம் இல்லை. 20களில் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய சம்பத் படிப்படியாக திமுக சேலம் (மேற்கு) துணை செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் செல்வகணபதியின் நம்பிக்கையையும் பெற்றவர். கொரோனா ஊரடங்கு காலங்களில் சேலம் மாவட்டத்தில் திமுகவின் நிவாரணப் பணிகளை முன்னிலையில் நின்று செயல்படுத்திய சம்பத் குமாரின் செயல்திறன் கட்சியின் உயர்மட்ட அளவுக்கு சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி தொகுதியில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை நிலவுவதாலும், களத்தில் சம்பத் குமாருக்கு நற்பெயர் இருப்பதாலும் எடப்பாடி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாத சூழலில் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1989, 1991, 2011, 2016 ஆகிய வருடங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி. கே. பழனிசாமி எடப்பாடி சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்வர் பழனிசாமி ஒரு பெரும் தலைவராக உருவெடுத்துவிட்டார், சம்பத் குமார் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிகின்றன.
முன்னதாக, திமுக எம்.பி. கனிமொழி விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார சுற்றுப்பயண பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் இருந்து கடந்தாண்டு தொடங்கினார். தேர்தல் பரப்புரையின் போது, முதல்வராக இருக்கிற பழனிசாமி, எடப்பாடிக்கு அரசு கலைக் கல்லூரி, ஜவுளி பூங்கா என முந்தைய தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டினர்
வரும் சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூரின் திமுக வேட்பாளராகக் கார்த்திகேய சிவசேனாபதி அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர், அதிமுக வேட்பாளர் வேலுமணியை எதிர்த்து போட்டியிடுகிறார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் வெளியிட்டது .171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மாநில அமைச்சர்கள் கே பி அன்பழகன் பாலக்கோடு தொகுதியிலும், சேவூர் ராமச்சந்திரன் ஆரணியிலும், டாக்டர் சரோஜா ராசிபுரத்திலும், தங்கமணி குமாரப்பாளையம் தொகுதியிலும், கோபிச்செட்டிப்பாளையத்தில் கே ஏ செங்கோட்டையனும் மீண்டும் போட்டியிடுகின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ” 7000 பேரை நேர்கண்டு, கள நிலவரம், நம் வலிமை – மாற்றார் நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து, மிகுந்த கவனத்துடன் வேட்பாளர் பட்டியலைத் தயாரித்தேன். அடுத்தடுத்த களங்களில் தகுதியான ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்வேன்! 234 தொகுதிகளிலும் வெற்றி ஈட்டிட உழைப்போம் வாரீர்” என்று தெரிவித்தார்.