தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி உறுதி செய்யப்படலாம் என்று கூறினார். மேலும், இரண்டு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும் என்றார்.
அதிமுக கட்சியுடன் பல்வேறு கட்டங்களாகத் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, கேட்கப்பட்ட தொகுதிகளை வழங்கவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமமுக கட்சியுடன் தேமுதிக இணையுமா என்கிற கேள்வி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தினகரன் கூறினார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வறட்சி நீங்கும் திட்டங்கள் தங்களுடைய முதன்மை நோக்கமாக இருக்கும் என்றும் முக்கியமாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம்தான் முதலில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். வருகிற 12-ம் தேதி ஒய்எம்சிஏ பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"