அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் அளித்துள்ளார்
நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக சார்பில் குக்கர் சின்னம் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதில், அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தயார் என டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அமமுகவிற்கு 'பரிசுப்பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் நடந்த அமமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார். அதன்பிறகு, தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் அளித்துள்ளார். அவரது விண்ணப்பம் மீது தலைமைத் தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 7-வது கட்டமாக வரும் மே மாதம் 19-ம் தேதி நடத்தப்படவுள்ள இடைத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜ், சூலூர் தொகுதியில் கே சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.