தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் உள்ள திமுக வரும் 7ஆம் தேதி ஆட்சியமைக்க உள்ளது. திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உதயநிதியை எல்.கே.சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்த்க்கு பொன்னாடை அணிவித்து அவரிடம் ஆசி பெற்றார். அதன்பின் விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதன்முறையாக தற்போதுதான் உதயநிதி சந்திக்கிறார்.
இதுகுறித்து விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில், திரைப்பட நடிகரும், சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக, சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார், என பதிவிட்டுள்ளார்.
இந்த தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்று, எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் கடைசி நேரத்தில் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தேமுதிக தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் மற்றும் உதயநிதி சந்திப்பு நடந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil