தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 124 இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
புதன்கிழமை நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஸ்டாலின் நேற்று வியாழக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து நாளை வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஸ்டாலினுடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர் என்ற நிலையில், யார் யாருக்கு அமைச்சர் பதவி என்று ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரிய விவாதமே நடந்து வந்தது.
இந்நிலையில், இன்று அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டது. நிறைய சீனியர்களுக்கும் சில புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவைப் பட்டியலில் ஷாக்கான விஷயம் என்னவென்றால், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் அதுவும் உள்ளாட்சி துறை வழங்கப்படும் என்றும் எல்லோரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்று வெளியான அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம் பெறவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி, முதன்முறையாக இந்த தேர்தலில் போட்டியிட்டார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அமைச்சரவையில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
ஏற்கனவே, ஸ்டாலின் கட்சித் தலைவரானது, தற்போது முதல்வராவது என அனைத்தையும் எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் என்று கூறிவருகின்றனர்.
மேலும் உதயநிதி தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்டிக்கிள் 15 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அதன்பின் நடிக்க முடியுமா? நடித்தால் எதிர்கட்சிகள், மக்கள் என்ன கூறுவார்கள் என்பதால் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
ஏனெனில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது பற்றி பேச்சு எழுந்தபோது, கலைஞர் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள், எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட பின் அவர் நடிப்பதை நிறுத்தி விடுவாரா என கேள்வி எழுப்பினர். மேலும் அவருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது. எனவே இப்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் சர்ச்சை ஏற்படும் என்பதால், பட்டியலில் அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்காததில் திமுக இளைஞரணியினருக்கு ஏமாற்றம் இருந்தாலும், உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான, இளைஞரணியின் முன்னாள் நிர்வாகியுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. அதுவும் முக்கியமான துறையான பள்ளிக்கல்வித்துறை கிடைத்ததில் திமுக இளைஞரணியினருக்கு மகிழ்ச்சியே.
திமுகவின் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகனுமான மகேஷ் பொய்யாமொழி இரண்டாவது முறையாக திருவெறும்பூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார். இவர் இந்த முறை அதிமுக முன்னாள் எம்.பி. குமாரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது அமைச்சராகவும் ஆகியுள்ளார்.
இருப்பினும், திமுக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் போது உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.