தேர்தல் பிரசாரத்தின்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, மறைந்த பாஜக சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மரணம் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம் குறித்து இன்று மாலை தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி விளக்கம் அளித்தார்.
தாராபுரம் தொகுதியில் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவாராஜ், அருண் ஜெட்லி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து பாஜக சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உதயநிதி மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் உதயநிதி இன்று (ஏப்ரல் 7) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி, என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் என்று தேர்தல் ஆணையத்திடம் இடைக்காலம் விளக்கம் அளித்துள்ளார்.
உதயநிதி தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள இடைக்கால விளக்கத்தில், “என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். தாராபுரம் பிரசாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை. ஒரு பகுதி உரையை மட்டுமே கவனத்தில் கொண்டு என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனது இடைக்கால விளக்கத்தை ஏற்றுக்கொண்டு முழு விளக்கத்தையும் அளிக்க கால அவகாசம் தரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.