UP Gathbandhan Muslim Candidates List : உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, யாரும் எதிர்பாரத வகையில் சமாஜ்வாடி கட்சியினருடன் கூட்டணி வைத்தது.
உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் 80 தொகுதிகளில் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் ராகுல் மற்றும் சோனியா காந்திக்காக வேறு யாரையும் நிறுத்தவில்லை அக்கூட்டணி. அது போக 3 இடங்களை ராஷ்ட்ரிய லோக் தளத்திற்கு கொடுத்துள்ளது.
UP Gathbandhan Muslim Candidates List
80 தொகுதிகளில் இந்த ஐந்து தொகுதிகள் போக மீதம் இருக்கும் 75 தொகுதிகளில் 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும், 37 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியினரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தனித்தனியாக தேர்தலை சந்தித்த காலங்களில், சிறுபான்மையினர் போட்டியிட அதிக தொகுதிகளை ஒதுக்கி வந்தனர்.
ஆனால் கூட்டணி அமைத்த பின்பு நிலைமை வேறாகிவிட்டது. இந்த தேர்தலில், இதுவரை அறிவிக்கப்பட்ட 67 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 10 நபர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள்.
இதற்கு முன்பு களம் இறக்கப்பட்ட சிறுபான்மை வேட்பாளர்கள்
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், 2014ம் ஆண்டு தேர்தலில் 19 இஸ்லாமியர்கள் நிறுத்தப்பட்டனர். 2009ல் 14 பேரும், 2004ம் ஆண்டு தேர்தலில் 20 பேரும் உ.பி.யில் போட்டியிட்டனர்.
சமாஜ்வாடி கட்சியில் 2014 தேர்தலில் 14 இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 2009ம் ஆண்டில் 11 நபர்களையும், 2004ம் ஆண்டு தேர்தலில் 12 பேரும் நிறுத்தப்பட்டனர்.
2019ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் இஸ்லாமியர்கள்
இம்முறை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 6 பேர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். சமாஜ்வாடி கட்சியின் சார்பில் 4 நபர்கள் போட்டியிடுகின்றனர்.
சமாஜ்வாடி கட்சியில் 37 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் 29 நபர்களின் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. மீதம் உள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டால், இந்த எணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பகுஜன் சமாஜில் இருந்து தொமரியாகஞ்ச், காஸீப்பூர், தௌரஹ்ரா, சஹாரான்பூர், அம்ரோஹா, மற்றும் மீரட் தொகுதிகளில் சிறுபான்மையினர் போட்டியிடுகின்றனர்.
மொரதாபாத், ராம்பூர், கைரானா, மற்றும் சாம்பால் ஆகிய தொகுதிகளில் சமாஜ் கட்சியினர் போட்டியிடுகின்றனர்.
புல்பூர், கௌஷாம்பி, அலஹாபாத், மஹராஜன்கஞ்ச், பல்லியா, சந்தௌலியா, வாரன்னாசி மற்றும் லக்னோ தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னும் சமாஜ்வாடி கட்சி அறிவிக்கவில்லை.
மேலும் படிக்க : கேரளாவில் காங்கிரஸ் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி எவ்வளவு வலிமையாக உள்ளது