Advertisment

தனிச் சின்னம் தடை ஆகுமா? விசிக 6 தொகுதிகள் ஸ்பீடு ரவுண்டப்

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் விசிக அந்த தொகுதிகளில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
தனிச் சின்னம் தடை ஆகுமா? விசிக 6 தொகுதிகள் ஸ்பீடு ரவுண்டப்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தனி தொகுதிள் 2 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 6 தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

Advertisment

திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி 1999ம் ஆண்டு முதல் தேர்தலைச் சந்தித்து வருகிறது. 1999ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜி.கே.மூப்பனார் அழைப்பின் பேரில் தமாகா கூட்டணியில் இடம்பெற்ற விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக 10 இடங்களில் போட்டியிட்டது. அதில், மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர், 2004 மக்களவைத் தேர்தலில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூட்டணியில் அம்பு சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் இந்த தேர்தலிலும் தோல்வியைத் தழுவினார்.

இதனைத் தொடர்ந்து, 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக 2 இடங்களில் வெற்றி பெற்றது.

2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டது. இதில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

அடுத்து வந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. அதே போல, 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக 2 சிதம்பரம், திருவள்ளூர் 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.

2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற விசிக, 25 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது.

இந்த தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்த விசிக, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் எம்.பி.ஆனார்கள்.

2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நீடிக்கும் விசிகவுக்கு காட்டுமன்னார்கோவில், வானூர், செய்யூர், அரக்கோணம், திருப்போரூர், நாகை ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 6 தொகுதிகளிலும் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

இதில், காட்டுமன்னார்கோவில், வானூர், செய்யூர், அரக்கோணம் ஆகிய 4 தனித் தொகுதிகளும் விசிக வலுவாக உள்ள தொகுதிகள்தான். அதே போல, திருப்போரூர், நாகை 2 தொகுதிகளிலும் விசிக பலமாக இருக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த 6 தொகுதிகளையும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று விசிக வட்டாரங்கள் கூறுகின்றன.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு, விசிக அந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. 2011ம் ஆண்டு தேர்தலிலும், 2016ம் ஆண்டு தேர்தலிலும் தோல்வியைத் தழுவியது. 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் போட்டியிடுகிறார். இந்த தொகுதி வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்றே விசிக வட்டாரங்கள் கூறுகின்றன. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள அதிமுக வேட்பாளர் முருகுமாறன் போட்டியிடுகிறார்.

வானூர் தொகுதியில் விசிக சார்பில் அக்கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளர் வன்னியரசு போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், விசிக பலமாக இருப்பதால் விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்றே விசிக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது வானூர் தொகுதியில் 3ம் இடத்தை பிடித்தது.

அதே போல, செய்யூர் தொகுதியில் விசிக சார்பில் பனையூர் பாபு போட்டியிடுகிறார். இவர் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும், 3வது இடத்தைப் பிடித்தார்.

அரக்கோணம் தொகுதியில் விசிக பொதுச் செயலாளர் எழுத்தாளர் கௌதம சன்னா போட்டியிடுகிறார். இவர் குறந்தியாறு நாவலை எழுதியுள்ளார். 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் செல்ப்பாண்டியன் 53,000 வாக்குகளுக்கு மேல் பெற்று தோல்வியைத் தழுவினார். என்றாலும், அரக்கோணம் தொகுதியில் விசிகவுக்கு செல்வாக்கு உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

திருப்போரூர் பொதுத் தொகுதியில் விசிகவின் மற்றொரு பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், விசிகவுடன் பாமக நேரடியாக போதுகிறது. அதனால், இங்கே போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடனும் விசிக தொண்டர்களின் பிரச்சாரத்தாலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று விசிகவினர் கூறுகின்றனர்.

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் விசிகவின் மற்றொரு பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் போட்டியிடுகிறார். இதற்கு முன்பு இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் இந்த தொகுதியில் விசிகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவே விசிகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், விசிக இந்த தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால் குறுகிய காலத்தில் வாக்காளர்களிடம் விசிக சின்னத்தை கொண்டு போய் சேர்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், 6 தொகுதிகளிலும் ஒரே சின்னம் ஒதுக்கப்படுமா? அல்லது வேறு வேறு சின்னங்கள் ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு, இந்த சமூக ஊடகக் காலத்தில் சின்னத்தை எளிதாக கொண்டு போய் சேர்த்துவிட முடியும். அதனால், 6 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று விசிகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Dmk Tamil Nadu Assembly Elections 2021 Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment