தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டணி பேச்சுகளும் தொகுதி பேரங்களும் விவாதமாகி வருகிறது.
தமிழக அரசியலில் தற்போது வரை கடந்த மக்களவை தேர்தலின்போது அமைந்த அதே கூட்டணிதான் சட்டமன்றத் தேர்தலிலும் களம் காணும் என்று தெரிந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு போன்றவையால் சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான விசிக தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டு வருவதாகக் கூற அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு, திமுக கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று கூறியதையடுத்து அந்த சலசலப்பு அடங்கியது.
இந்த சூழலில்தான் திமுக கூட்டணியில் உள்ள விசிக வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 25 தொகுதிகளை குறிவைத்துள்ளதாகவும் அதில் 15 தொகுதிகளை திமுகவிடம் கேட்க உள்ளதாகவும் விசிக வட்டாரங்கள் கூறுகின்றன.
பொதுவாக விசிக காட்டுமன்னார்கோயில் தொகுதி அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள முக்கிய தொகுதியாக இருந்துவருகிறது. இந்த தொகுதியில் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபோது விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டு மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். விசிகவில், முதன்மைத் தலைவர்களான திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் அக்கட்சி பலமாகவும் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வந்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.பி.க்களாக இருப்பதால், அக்கட்சியில் அவர்களுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் தலைவர்கள் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக விசிக வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக கூட்டணியில் விசிக எத்தனை தொகுதிகளைக் கேட்க திட்டமிட்டுள்ளது யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக விசிக கட்சியினரிடையே விசாரித்தோம். அதற்கு விசிக தற்போது 25 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளது என்றும் அதில் 15 தொகுதிகளை திமுகவிடம் கேட்க திட்டமிட்டுள்ளதாக அதில் வெற்றி பெறும் அளவு பலம் உள்ளதாகத் தெரிவித்தனர். இதில் இரட்டை இலக்கத்திற்கு குறையாமல் தொகுதிகளைப் பெறுவோம் என்று விசிக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தனர். காட்டுமன்னார்கோயில், வானூர், பொன்னேரி, செய்யூர், பூந்தமல்லி, கெங்கவல்லி, ஆத்தூர், அரூர், கள்ளக்குறிச்சி, சோழவந்தான், சீர்காழி, பெரம்பலூர், திட்டக்குடி, கே.வி.குப்பம், செங்கம், வந்தவாசி, திருவள்ளூர் உள்ளிட்ட தொகுதிகள் விசிக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
விசிக எந்தெந்த தொகுதிகளை கேட்க உள்ளது யார் யாரை வேட்பாளரகளாக நிறுத்த திட்டமிட்டுள்ளது என்று விசாரித்தபோது, காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனின் சகோதரி மகன் இசையமுதனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து விசிக முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
விசிகவில் திருமாவளவன், ரவிக்குமாருக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் யார் யார் எல்லாம் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளார்கள் என்று விசாரித்தபோது, காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதற்கு விசிகவில் கடும் போட்டியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர். காட்டுமன்னார் கோயில் தொகுதி விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு ஒதுக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், சிந்தனைச் செல்வனுக்கு அதில் விருப்பமில்லை என்றும் அவர் ஏற்கெனவே போட்டியிட்ட வானூர் தொகுதியில் போட்டியிட இப்போதே களப்பணியைத் தொடங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். அதே போல, அக்கட்சியில், கௌதம சன்னா, பாலசிங்கம், எஸ்.எஸ்.பாலாஜி, வன்னி அரசு, ஆளூர் ஷாநவாஸ், உஞ்சை அரசன், உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடும் அடுத்த கட்ட தலைவர்களக இருப்பார்கள் என்று விசிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
அதோடு, விசிகவில் உள்ள புலி ஆதரவு நிர்வாகி ஒருவர் விசிக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கட்சியில் நெருக்கமானவர்கள் இடையே கூறி வருவதாக ஒரு வட்டாரம் கூறினார்கள்.
திமுக 180 - 200 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதால், கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் கேட்கிற சீட் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்று சிலர் ஐயங்களையும் எழுப்புகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.