AIADMK - DMDK Alliance 2019: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. அதோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தே.மு.தி.க - அ.தி.மு.க கூட்டணி உறுதியாகியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 4 தொகுதிகளை தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கியிருக்கிறது, அ.தி.மு.க தலைமையிடம்.
இந்தச் சூழலில் தேமுதிக நிலை குறித்து அதன் தலைவர் விஜயகாந்த் சற்று நேரத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் இங்கே:
Vijayakanth Alliance 2019
9:15 PM: தேமுதிக.வுக்கு மாநிலங்களவை பதவியோ, உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீடோ, 21 தொகுதியில் பங்கீடோ அறிவிக்கப்படவில்லை. பிரஸ்மீட்டில் பிரேமலதா பேசியதை கவனமாக கேட்ட விஜயகாந்த், அவராக எதுவும் கூறவில்லை.
9:15 PM: பிரஸ்மீட்டில் பேசிய பிரேமலதா, ‘கடந்த முறை எனது பேட்டி திரிக்கப்பட்டது. அம்மா-கேப்டன் அமைத்த கூட்டணி போன்று வெற்றிக் கூட்டணியாக இது அமையும். அடுத்து வருகிற 21 தொகுதி இடைத்தேர்தல், பின்னர் வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம்’ என்றார்.
9:10 PM: அதிமுக அணி கூட்டணி நிலவரம்:
மொத்த தொகுதிகள்: 40
அதிமுக: 21
பாமக : 7
பாஜக : 5
தேமுதிக : 4
புதிய தமிழகம் : 1
என்.ஆர்.காங்கிரஸ் : 1
புதிய நீதிக் கட்சி : 1
9:05 PM: தேமுதிக.வுக்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக பிரஸ்மீட்டில் அறிவித்தார்.
8:55 PM: செய்தியாளர்களை சந்திக்க முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதிஷ் ஆகியோர் முதலில் வந்தனர். கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்த விஜயகாந்த், செய்தியாளர் சந்திப்பிலும் பின்னர் கலந்து கொண்டார்.
8:45 PM: கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.
8:40 PM: அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாமக.வுக்கு 7 தொகுதிகள், பாஜக.வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய நீதிக்கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தக் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறது.
எனவே 25 தொகுதிகளை கைவசம் வைத்திருக்கும் அதிமுக, தேமுதிக.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும் நிலை ஏற்படலாம். த.மா.கா.வுக்கு ஒரு இடம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கும் முயற்சியும் நடக்கிறது.
8:25 PM: அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. 4 தொகுதிகள் தேமுதிக.வுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரபூர்வ தகவல் சில நிமிடங்களில் தெரிய வரும்.
8:10 PM: சென்னை கிரவுண்ட் பிளாசா ஹோட்டலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வந்தார். அதிமுக தரப்பில் அமைச்சர் வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோரும் அங்கு இருக்கிறார்கள்.
தேமுதிக தரப்பில் விஜயகாந்துடன் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் வந்திருக்கிறார்கள். சற்று நேரத்தில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8:00 PM: அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த, சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த். சற்று நேரத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
7:40 PM: வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் 38 நாட்களே இருப்பதால், கூட்டணியை உடனடியாக இறுதி செய்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. திமுக கூட்டணி நிறைவு பெற்றுவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் மட்டும் பிடிகொடாமல் நழுவி வந்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 10) இரவு 7.15 மணிக்கு மேல் கூட்டணியை இறுதிபடுத்தும் வேலையை தேமுதிக வட்டாரம் விரைவுபடுத்தியது. சென்னையில் முக்கிய ஹோட்டலுக்கு அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் விரைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக பேட்டி அளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், ‘இன்னும் சற்று நேரத்தில் கூட்டணி உறுதி செய்யப்படும்’ என்றார்.