விஜயகாந்த் தரப்பிலிருந்து மறுபடியும் அதிமுக.வுடன் விறுவிறுப்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. பாஜக.வின் தலையீட்டால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.
தமிழக தேர்தல் களத்தில் கூட்டணிக்கான காய் நகர்த்தல்கள் விறுவிறுப்பாக நடக்கின்றன. அதிமுக தனது அணியில் பாஜக, பாமக கட்சிகளை இணைத்து ஒப்பந்தம் போட்டது. திமுக தனது பக்கம் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றை சேர்த்திருக்கிறது.
இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் திமுக இன்னும் தொகுதி பங்கீடை முடிக்கவில்லை. இதற்கிடையே தேமுதிக.வை இழுக்க இரு பெரிய திராவிடக் கட்சிகளும் காய் நகர்த்துகின்றன. அதிமுக தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஜெயகுமார் ஆகியோர் தேமுதிக.வுடன் கூட்டணி பேசுவதை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
அதேசமயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடல் நலம் விசாரிக்க விஜயகாந்தை சந்தித்தார். அப்போது அரசியலும் பேசப்பட்டதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார். இதன் மூலமாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தொகுதி பேரத்தை தேமுதிக நடத்துவது உறுதி ஆனது.
அதிமுக தரப்பில் தொடக்கத்தில் 3 சீட்கள் மற்றும் தேமுதிக.வுக்கு தருவதாக கூறப்பட்டது. ஆனால் விஜயகாந்த், பாமக.வுக்கு இணையாக ‘ஏழு பிளஸ் ஒன்று’ கேட்டார். இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே திமுக தரப்பில் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.
திமுக தரப்பில், ‘நான்கு பிளஸ் ஒன்று’ என விஜயகாந்துக்கு ஆஃபர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விஜயகாந்த் தரப்பில், ‘ஐந்து பிளஸ் ஒன்று’ மற்றும் சில நிபந்தனைகளை விதித்ததாக திமுக தரப்பில் தகவல் கூறுகிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் திமுக-விஜயகாந்த் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை விழுந்தது.
இதற்கிடையே பாஜக தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக மீண்டும் தேமுதிக.வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது அதிமுக. அதிகபட்சமாக 5 தொகுதிகளை வழங்க அதிமுக தயாராகியிருக்கிறது. 21 தொகுதி இடைத்தேர்தல் ஆதரவு மற்றும் சில அம்சங்களை பேசி முடிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிறார்கள், அதிமுக வட்டாரத்தில்!
விஜயகாந்த் பிடி கொடாமல் நழுவுவது காரணமாகவே இரு பெரிய கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தடுமாறுகின்றன. மார்ச் 2-ம் தேதி முதல் திமுக தனது பழைய தோழமைக் கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்வதில் கவனம் செலுத்த இருக்கிறது. எனவே தேமுதிக.வுக்கு திமுக தனது கதவை சாத்திவிட்டதாகவே தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.