அதிமுக.வுடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடந்த சூழலிலும் வெளிப்படையாக தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே எல்.கே.சுதீஷும் அதிமுக அணியில் இருந்து விலகி வர விரும்புவதாக தன்னிடம் கூறினார் என்றார் துரைமுருகன்.
விஜயகாந்தின் தேமுதிக, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்க இருக்கிறது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இன்று (மார்ச் 6) சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக சார்பில் பிரேமலதா பங்கேற்ககூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விமான நிலையம் அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக, தேமுதிக தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷும் இதில் கலந்து கொண்டார்கள்.
ஆனால் இதில் கூட்டணி தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை. கிட்டத்தெட்ட இதே வேளையில் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் உள்பட சில நிர்வாகிகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் துரைமுருகனை சந்தித்து பேசினர்.
இதனால் இவர்கள் விஜயகாந்த் மீது அதிருப்தி ஏற்பட்டு, திமுக.வில் இணைய வந்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ‘தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக’ தேமுதிக நிர்வாகிகள் பின்னர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டனர். சுமார் முக்கால் மணி நேர சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் கூறியதாவது:
‘2 பேரு வந்திருப்பதாக கூறினார்கள். ஒருவர் முருகேசன், அந்தக் கட்சி மாவட்டச் செயலாளர். ‘அங்க சரியில்ல, திமுக அணிக்கு வர விரும்புகிறோம்’ என்றார். ‘என்ன காரணம்? அதிகாரபூர்வ முடிவா? அதிருப்தியில் எடுத்த முடிவா?’ எனக் கேட்டேன். அதற்கு, ‘முதலில் ஒரு முடிவு எடுத்தார்கள். மா.செ. கூட்டத்தில் அதிருப்தி அதிகமாகிவிட்டது. பாமக.வுக்கு அதிகம் கொடுத்துவிட்டார்கள். அதனால் இங்கு வர விரும்புகிறோம்’ என்றார்கள்.
விஜயகாந்துக்கு இது தெரியுமா? என்றேன். அதற்கு, ‘உங்க விருப்பம் அதுதான் என்றால், பேசிட்டு வாங்க என விஜயகாந்த் அனுப்பியதாக’ கூறினார்கள். ‘உங்க முடிவு நல்ல முடிவு, ஆனால் எங்களிடம் சீட்ட் இல்லையே?’ என்றேன். ‘எப்படியாவது சீட் ஒதுக்குங்க’ என்றார்கள்.
‘நீங்க ரெண்டு பக்கமும் பேசுறீங்க. பிரதமர் நிகழ்ச்சியில் விஜயகாந்த் படம் இருக்கே’ எனக் கேட்டேன். ‘இப்போதான் எடுத்துட்டு வந்திருக்கோம்.’ என்றார்கள். ‘யப்பா, இன்னைக்கு ஒன்னு, நாளைக்கு ஒன்னு சொல்றீங்க. உங்களை நம்பி, நான் எப்படி பேசுவது?’ எனக் கேட்டேன்.
ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்தாங்க. முக்கால் மணி நேரம் பேசினாங்க. எனக்கே டயர்ட் ஆயிட்டுது. ஏற்கனவே சுதிஷ் என்னிடம் பேசினார். அதிமுக அணியில் இருந்து விலகி வருவதாக கூறினார். வந்தாலும் இங்க சீட் இல்லையேன்னு சொன்னேன்.
இருந்த சீட்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துட்டோம். நாங்களே 20 தொகுதிகளில்தான் நிற்கிறோம். இனி கொடுத்த சீட்களை நான் போய் வாங்க முடியாது. இதுக்கு மேல எதாவது முடிவுன்னா எங்க தலைவர்தான் எடுப்பார்’ என்றார் துரைமுருகன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.