Rajinikanth Praises Vijayakanth Son Vijaya Prabhakaran: விஜயகாந்தை சந்தித்தபோது அவரது மகன் விஜயபிரபாகரனின் அரசியல் பேச்சை ரஜினிகாந்த் பாராட்டிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிக்கு நன்றி கூறியிருக்கிறார் விஜயபிரபாகரன்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன், சினிமாவில் நடிக்கிறார். மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். உடல்நலப் பிரச்னைகள் காரணமாக விஜயகாந்தால் செல்ல முடியாத இடங்களுக்கு விஜய பிரபாகரனே செல்கிறார்.
அண்மையில் சென்னையில் டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அங்கு சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசியவர் விஜய பிரபாகரன்தான். விஜயகாந்த் கட்சி தொடங்கிய புதிதில் மைக் பிடித்து இயல்பாகப் பேசி மக்களை கவர்ந்ததுபோலவே விஜய பிரபாகரனின் பேச்சும் இருப்பதாக தேமுதிக.வினர் கருத்து கூறுகின்றனர்.
இந்தச் சுழலில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லம் சென்றார். விஜயகாந்தின் உடல்நலம் பற்றி விசாரித்த ரஜினிகாந்த், விஜய பிரபாகரனின் கையைப் பற்றிக்கொண்டு ஏதோ கூறுவதாக புகைப்படங்கள் வெளிவந்தன.
தற்போது அந்த ரகசியத்தை விஜய பிரபாகரனே உடைத்திருக்கிறார். விஜய பிரபாகரனின் அரசியல் பேச்சு காணொளியை பார்த்ததாகவும், சிறப்பாக பேசியிருப்பதாகவும், இதேபோல செயல்பட வேண்டும் என்று ரஜினி கூறியதாகவும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தங்கள் நம்பிக்கையை காப்பேற்றுவேன் அங்கிள் என்றும் அதில் பணிவாக குறிப்பிட்டிருக்கிறார் விஜய பிரபாகரன். ரஜினிகாந்தின் இந்த அங்கீகாரம் தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.