விஜயகாந்த் - டிடிவி தினகரன் கூட்டணியா? தூது போனவர் இவர்தான்

விஜயகாந்த் தனது கட்சியினருடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக கூறி, சரத்குமாருக்கு விடை கொடுத்திருக்கிறார்.

விஜயகாந்த் – டிடிவி தினகரன் இணைவார்களா? என்கிற விவாதம் அரசியல் வட்டாரத்தில் சூடு பிடித்திருக்கிறது. இதற்காக தூது போன பிரபலம், சில பல புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு விஜயகாந்தை கரைக்க முயற்சி எடுத்திருக்கிறார்.

விஜயகாந்தின் தேமுதிக, என்ன விதமான அரசியல் நிலையை எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பாகவே இருக்கிறது. திமுக தரப்பில் பழைய தோழமைக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை கிடப்பில் போட்டுவிட்டு, விஜயகாந்துடன் ரகசியமாக சில சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார்கள். ஆனால் விஜயகாந்த் கேட்ட ‘டிமாண்ட்’களுக்கு திமுக உடன்படவில்லை. குறிப்பாக 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் விஜயகாந்த் குறிப்பிட்ட சில தொகுதிகளை கேட்டதாகவும், திமுக அது குறித்து இப்போது பேச விரும்பவில்லை என கூறியதாகவும் தெரிகிறது.

TTV Dinakaran, Vijayakanth Kootani, Captain Vijayakanth, விஜயகாந்த், டிடிவி தினகரன்

எனவே அதிமுக.வுடன் பேச்சுவார்த்தையை தொடர்கிறது தேமுதிக. அநேகமாக 5 லோக்சபா தொகுதிகள், 3 சட்டமன்றத் தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவிகித இடங்கள் என தேமுதிக-அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம்.

பிப்ரவரி 5-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் விஜயகாந்த். அந்தக் கூட்டம் முடிவில் அதிமுக-தேமுதிக உடன்பாடு கையெழுத்தாகவும், 6-ம் தேதி சென்னையில் பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மொத்தக் கட்சியினரும் பங்கேற்க வாய்ப்பு அதிகம்!

இதற்கிடையே மார்ச் 3-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் சாலிகிராமம் இல்லத்தில் விஜயகாந்தை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சரத்குமார், ‘உடல்நலம் விசாரித்துவிட்டு, அரசியல் நிலவரங்களும் பேசினேன். எனது கருத்துகளை கூறியிருக்கிறேன். எனினும் விஜயகாந்த் அவரது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசியே முடிவெடுப்பார்’ என்றார் சரத்குமார்.

சரத்குமார், வெளிப்படையாக அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார். அந்தக் கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறி வருகிறார் சரத்குமார். திமுக.வுடன் சரத்குமாருக்கு பெரிய நெருக்கம் இல்லை. தவிர, திமுக.வில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கே இடம் பங்கிட்டு கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

எனவே சரத்குமாரின் ஆப்ஷன் டிடிவி தினகரன் தான். ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னை ஆதரித்த சரத்குமாரை ஏற்க டிடிவி-யும் தயார். அந்த அடிப்படையில் சரத்குமார் கட்சிக்கு ஒரு இடத்தை டிடிவி தினகரன் ஒதுக்குவார் என தெரிகிறது. ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மட்டும் டிடிவி தினகரன் ஓரு இடம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகரில் தன்னை ஆதரித்தவர்கள் தவிர, வேறு யாரிடமும் இந்தத் தேர்தலில் கூட்டணி இல்லை என்பதை தனது நிலைப்பாடாக டிடிவி தினகரன் கூறியிருப்பதாக தெரிகிறது. எனினும் விஜயகாந்துடன் பேசிப் பார்ப்பதாக டிடிவி-யிடம் ஒப்புதல் பெற்றுவிட்டே சரத்குமார் சாலிகிராமம் சென்றதாக கூறப்படுகிறது.

அதிமுக தொண்டர்கள் பெருமளவில் டிடிவி தினகரனுடன் இருப்பதாகவும், அண்மையில் வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு பகுதியில் டிடிவி தினகரன் சென்ற சுற்றுப்பயணங்கள் எழுச்சியுடன் இருந்ததாகவும், 3-வது அணியாக டிடிவி தினகரன் – விஜயகாந்த் கைகோர்த்தால் தமிழக அரசியல் திசையை மாற்ற முடியும் என்றும் சில புள்ளிவிவரங்களுடன் சரத்குமார் கூறியதாக தெரிகிறது.

எனினும் விஜயகாந்த் தனது கட்சியினருடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக கூறி, சரத்குமாருக்கு விடை கொடுத்திருக்கிறார். விஜயகாந்த் ஏற்கனவே 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியை நிரூபித்தவர்! தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தவர்! எனவே ஜீனியர் பார்ட்னராக குறைந்த தொகுதிகளை பெற்றுக்கொண்டு அமமுக.வுடன் கூட்டணி அமைக்க அவர் விரும்பவில்லை என்றே தகவல்!

 

Get all the Latest Tamil News and Election 2020 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close