சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தோழி சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்டுச் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அதிமுகவுக்கும் இரட்டை இலை சின்னத்துகும் உரிமை கோரி சசிகலா சார்பில் நீதிமன்றத்தில் விரைவில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா இடையே அதிமுக சின்னம் உரிமை கோரும் மோதல் தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2016ம் தேதி உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, சில மாதங்களுக்குப் பிறகு, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என்றும் அவர் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில், சசிகலா தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தார் என்று குற்றம் சாட்டி ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து தர்ம யுத்தம் தொடங்கினார்.
ஓ.பி.எஸ்.-க்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் மூத்த அரசியல் தலைவர்களும் ஆதரவாக குரல் கொடுத்ததால் அதிமுக ஓ.பி.எஸ் அணி சசிகலா ஆதரவு அணி என்று பிரிந்தது.
இதனைத் தொடர்ந்து சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். இதனிடையே, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையிட்டில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா இறந்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையுடன் அபராதமும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதனால், சசிகலா சிறை செல்வதற்கு முன்பு தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்துவிட்டு சிறைக்கு சென்றார்.
முதல்வரான எடப்பாடி பழனிசாமி அணியும் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ். அணியும் இணைந்தது. பின்னர், அதிமுகவில் இருந்து சசிகலாவும் அவரது சகோதரி மகன் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உறவின்ர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். ஒ.பி.எஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் இ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் கே.பி. முனுசாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
இதையடுத்து, அதிமுக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும் சசிகலா டிடிவி தினகரன் ஆதரவளார்கள் மற்றொரு அணியாகவும் பிரிந்தன. இரு அணிகளும் மறைந்த ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியது. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் அளிக்காமல் முடக்கியதால் டிடிவி தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு, தேர்தல் ஆணையத்தில் அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் இரண்டு அணியினரும் உரிமை கோரினார்கள். தேர்தல் ஆணையம் அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் ஓ.பி.எஸ், இபி.எஸ் அணிக்கு வழங்கியது.
2017-ம் ஆண்டு அதிமுக பொது செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளரான தான் இல்லாமல் கட்சி பொதுக்குழு கூட்டக்கூடாது என்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் அமமுக-வைத் தொடங்கினார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இ.பி.எஸ் அரசுக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கினார்கள். அவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்தும் எம்.எல்.ஏ பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். காலியான சடப்பேர்வை தொகுதிகளில், 2019ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுடன் நடைபெற்ற இடைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்று இ.பி.எஸ் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.
இதனிடையே, அக்டோபர் 2020-இல், எடப்பாடி பழனிசாமி 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதற்குள் 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருந்த நிலையில், அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஜனவரி 20ம் தேதி பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் விக்டோரியா தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். சசிகலாவுக்கு தண்டனைக் காலம் முடிவடைந்ததால், விக்டோரியா மருத்துவமனையில் இருந்து ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
சசிகலா விடுதலையாவதற்கு முன்னதாக, அவர் சிறையில் இருந்து விடுதலையானால் அதிமுகவில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் அதிமுகவினர் பலர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று அரசியல் விவாதங்கள் நடந்துவந்தது.
விடுதலையான சசிகலா, ஜனவரி 31ம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளி குலாஃப்ஷயர் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு பறந்துகொண்டிருந்தது. இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த விடுதியில் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்டதற்குப் பிறகு அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு, அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுகவை உரிமை கொண்டாட முடியாது” என்று கூறினார்.
அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஊடகங்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “அதிமுக கொடியை பயன்படுத்தும் அத்தனை அதிகாரமும் சசிகலாவிற்கு உள்ளது. ஏனென்றால் அவர்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர். செயற்குழு பொதுக்குழு கூட்டும் அதிகாரம் சசிகலாவிற்குதான் உள்ளது. அவர் பயன்படுத்திய கார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார். அமமுக தொடங்கியது அதிமுகவை மீட்டெடுக்கத்தான். அதிமுக-வை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடரும். சசிகலா தமிழகம் வந்த பின்னர் அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டம் தொடரும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதே நேரத்தில், சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் பலரும் சுவரொட்டி, பிளக்ஸ் பேனர்களை வைத்து ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரையும் அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி வருகிறது.
இந்த சூழலில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவில் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர். அதிமுக-வில் இணைய கோரி டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலிக்கப்படும்” என்று கூறியதால் மேலும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது.
கே.பி.முனுசாமியின் கருத்தால், சசிகலாவும் டிடிவி தினகரனும் மீண்டும் அதிமுகவில் இணைவார்களா என்ற விவாதம் உருவானது.
இந்த சூழலில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், இது குறித்து உயர் நீதிமன்றத்தில் ஒரு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வோம் என்று கூறினார்.
இதனால், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வி.கே.சசிகலா சார்பில் அவருடய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், 2017ம் ஆண்டு தேர்தல் ஆணையம் அதிமுக கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திங்கள்கிழமை அறிவித்தார்.
கே.பி.முனுசாமியின் கருத்து குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “டிடிவி தினகரன் பற்றி கே.பி முனுசாமி சொன்னது அவரது சொந்த கருத்து. கட்சியில் இருந்து அறிக்கை வந்தால் மட்டுமே அதிகாரப்பூர்வ கருத்தாக இருக்கும்.
சசிகலா காரில் அதிமுக கொடியை கட்டியது சட்டவிரோதமானது. அதிமுக கொடியை கட்டியதற்கு சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
அதே நேரத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “செப்டம்பர் 12, 2017 அன்று சசிகலா, டிடிவி தினகரன் இருவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் அதிமுக கொடியைப் பயன்படுத்தியது சட்டவிரோதமானது. கட்சியின் உறுப்பினராக இல்லாத சசிகலா அல்லது யாராவது அதிமுக கொடியை தவறாகப் பயன்படுத்தியதற்கா அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்படும்” என்று எச்சரித்தார்.
இந்த சூழலில், சசிகலா காரில் அதிமுக கொடி வைத்திருந்தது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், சில அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள், பேனர்கள் வைக்கப்படுவதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக கொடியைப் பயன்படுத்திய சசிகலா, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா அதற்காக என்னமாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார்? அதிமுகவில் இருந்து எந்த அளவுக்கு பெரும்பான்மை ஆதரவாளர்களை ஈர்க்கப்போகிறார்? அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்தான் இதற்கு பதிலாக அமையும் என்பதால் என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.