சசிகலாவை சந்திக்கும் வி.ஐ.பி.கள்… பதற்றத்தில் அதிமுக?

VK Sasikala News In Tamil: அதிமுக டிரஸ்ட்களை சசிகலா கைப்பற்றினால், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமே கைமாறும் என்கிறார்கள்.

VK Sasikala Tamil News: சசிகலா வருகை அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. உண்மையில் மிகச் சாதாரணமாக கடந்து போயிருக்க வேண்டிய இந்த வருகையை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அடைப்பு, அதிமுக தலைமை அலுவலகம் பாதுகாப்பு, டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்களே சென்று புகார்… என பரபரப்பு ஆக்கியது ஆளும்கட்சிதான்.

பிப்ரவரி 7-ம் தேதி தமிழகம் திரும்புவதாக இருந்த சசிகலா, தனது வருகையை 8-ம் தேதிக்கு மாற்றி இருக்கிறார். 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்து வரும் சசிகலா, உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்து போயிருப்பார்; எனவே சட்டமன்றத் தேர்தல் முடிகிற வரையிலாவது அரசியல் பக்கம் தலைகாட்ட மாட்டார் என்றுதான் இப்போதைய அதிமுக தலைமை நம்பியது.

ஆனால் பெங்களூருவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா அதிமுக கொடி கட்டிக்கொண்டு, ஜெயலலிதா பயன்படுத்திய காரில் வெளியே வந்தது இபிஎஸ் தரப்புக்கு முதல் ஷாக்! அதிமுக அடையாளத்தையும், ஜெயலலிதா அடையாளத்தையும் சசிகலா அழுத்தமாக தன்னுடன் எடுத்துச் செல்ல இருப்பதற்கான முன்னோட்டம் அது.

அடுத்து சொல்லி வைத்ததுபோல, சசிகலா ஆதரவாளர்கள் பலரும், ‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என்றே போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், ‘சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்து எங்களை வழிநடத்துவார்’ என குறிப்பிட்டார். இவை எல்லாமே சசிகலாவுக்கு தெரிந்து, அவரது அனுமதியுடன் நடைபெறும் சங்கதிகள்தான்!

எந்த அடிப்படையில் சசிகலா தரப்பில் இப்படி துணிந்து, பொதுச்செயலாளராக முன்னிறுத்துகிறார்கள் என்றால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்குதான் இதற்கு காரணம்! சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, 2017 செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு கூடியது. அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்ததுடன், ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகியோரை முறையே ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என அறிவித்து, அவர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டது. அதன் மூலமாக முந்தைய பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்த தீர்மானம் ரத்து ஆனது.

இந்தப் பொதுக்குழுவின் 12 தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்தத் தீர்மானங்கள் ரத்து ஆனால், முந்தைய பொதுக்குழு தீர்மான அடிப்படையில் சசிகலா பொதுச்செயலாளர் ஆவார். எனவே இந்த வழக்கை துரிதப்படுத்துவதுதான் சசிகலாவின் முதல் அஜென்டாவாக இருக்கும்.

அடுத்துதான் அரசியல் நகர்வுகள்! அமைச்சர்கள் சிலரே சசிகலா ஆதரவு மனப்பான்மையில் இருப்பது அனைவரும் அறிந்த ரகசியம். ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் தனது சமூக வலைதளத்தில், ‘சசிகலாவின் உடல் நலத்திற்கும் அறப்பணிக்கும்’ வாழ்த்து தெரிவித்ததைப் போல, அமைச்சர்கள் சிலரே நேரடியாக வாழ்த்து கூறும் வாய்ப்பு இருக்கிறது. சனிக்கிழமை மாலையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய அஜன்டா இதுதான். ‘அமைச்சர்களோ, தலைமைக்கழக- மாவட்டக் கழக நிர்வாகிகளோ அப்படி சென்றுவிடக்கூடாது’ என இந்தக் கூட்டத்தில் இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது.

எனினும் மாவட்டச் செயலாளர்களுக்கு கீழே உள்ள நிர்வாகிகள் பலர் சசிகலாவை சந்திக்கவே செய்வார்கள். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அதிமுக விவகாரத்தில் மிக முக்கியமான ஒரு துருப்புச் சீட்டு. அதிமுக டிரஸ்ட்கள் இன்னமும் இவர் பெயரில் இருக்கின்றன. ஆனால் இபிஎஸ்- ஓபிஎஸ் இதுவரை இவரை கண்டுகொள்ளவில்லை. பூங்குன்றனே தன்னுடைய ஆதங்கத்தை அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவர் சசிகலாவை சந்திப்பார் என்றே தகவல்கள் வருகின்றன. அவர் மூலமாக அதிமுக டிரஸ்ட்களை சசிகலா கைப்பற்றினால், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமே கைமாறும் என்கிறார்கள். இது அரசியல் ரீதியாக பெரிய திருப்பமாக இருக்கும்.

அடுத்து, அதிமுக.வுக்கு வெளியே பல்வேறு தலைவர்களிடம் சசிகலாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. குறிப்பாக தா.பாண்டியன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், வைகோ, திருமாவளவன், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சசிகலாவை சந்திக்க தயாராகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உடனடி அரசியல் கூட்டணி இல்லை என்றாலும், சசிகலாவிற்கான அரசியல் முக்கியத்துவத்தை அதிகரிக்கும்.

தேர்தல் பிரசாரத்தை மும்முரமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு ஃபைட் கொடுப்பதைவிட, சசிகலாவை சமாளிக்க இபிஎஸ் தரப்பு அதிக நேரத்தை செலவிட நேரலாம். சசிகலா தற்காலிகமாக தங்க இருப்பதாக கூறப்படும் சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் இல்லம் முக்கியத்தும் பெறும்.

இதற்கிடையே ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வாழ்த்து தெரிவித்த விவகாரம் கட்சிக்குள் இன்னும் விவாதங்களை கிளப்பியபடியே இருக்கிறது. சசிகலாவை ஆதரித்து சுவரொட்டி ஒட்டுகிறவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், ஓபிஎஸ்.ஸுக்கு தெரியாமலா அவரது மகன் வாழ்த்துச் செய்தி போட்டார்? ஜெய பிரதீப் மீதும் நடவடிக்கை வேண்டாமா? என்கிற குரல்கள் அதிமுக.வில் ஒலிக்கின்றன.

சசிகலாவுக்கு, ‘ஒரு தாய் பிள்ளைகளாக நின்று வரவேற்பு கொடுப்போம்’ என மறைமுகமாக அதிமுக.வினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் டிடிவி தினகரன். அந்த வரவேற்புப் படலம் இன்னும் பல நிலவரங்களை படம் பிடித்துக் காட்டக்கூடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vk sasikala tamil news vk sasikala coming to tamil nadu aiadmk meeting

Next Story
விவசாயக் கடன்கள் தள்ளுபடி: தேர்தல் வாக்குறுதியில் தேசிய வங்கிகளுக்கு நீளுமா?tamil nadu govt announced agri loan waiving, agri loan waiving may support to aiadmk, tamil nadu assembly elections 2021, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்டமன்றத் தேர்தல் 2021, அதிமுக, தமிழ்நாடு, விவசாயக் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கி விவசாயக் கடன் தள்ளுபடி, tn assembly elections 2021, farmer loan, agri loan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com