Advertisment

2-வது தொகுதியாக கேரளாவின் வயநாட்டை ராகுல் தேர்வு செய்ய காரணம் என்ன?

ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதற்காக நாங்கள் கட்டாயமாக வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு சென்றுவிடமாட்டோம் - இடதுசாரி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Wayanad Congress Candidate Rahul Gandhi

Wayanad Congress Candidate Rahul Gandhi

Wayanad Congress Candidate Rahul Gandhi : காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதியில் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கேரளாவின் வயநாட்டில் இருந்து போட்டியிடப் போகிறார் என்பதை  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ்.

Advertisment

மேலும் படிக்க : ராகுல் காந்தி 2-வது தொகுதியாக வயநாட்டில் போட்டி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வயநாட்டை தேர்வு செய்வதற்கு காரணம் என்ன ?

வடக்கு கேரளத்தில், பழங்குடிகள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு தொகுதியாக உள்ளது வயநாடு. 2009 மற்றும் 2014 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் இந்த தொகுதியில் வெற்றி பெற்று, எம்.ஐ.ஷானவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரானார். 2009ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2014ம் ஆண்டில் காங்கிரஸின் வாக்கு வங்கிகள் சரியத்துவங்கின. இருப்பினும் காங்கிரஸே அங்கு வெற்றி பெற்றது. எம்.ஐ. ஷானவாஸ் கடந்த ஆண்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு இருமுனை போட்டிகள் தான் என்றுமே. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மட்டும் தான் கேரளத்தின் தேர்தல் களத்தில். இங்கு பாஜகவை எதிர்க்க மேற்கொள்ளப்படும் பிரயத்தனங்கள் தேவைப்படாது. 20 கேரள தொகுதிகளில் ஒன்றான வயநாடு தொகுதியின் கீழ் வரும் 7 சட்டசபை தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினரின் கோட்டையாக உள்ளது.

கேரளாவில் இது வரை நேரு-காந்தி குடும்பத்தினர் நேரடியாக போட்டியிட்டதில்லை என்பதால் இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் தோல்வி பயம் இல்லாமல் தேர்தலை இங்கு எதிர்கொள்ள இயலும்.

இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் கேரளா என்றுமே முக்கிய கவனம் பெரும் மாநிலமாகும். ஏ.கே. அந்தோனி துவங்கி, சமீபத்தில் கே.சி.வேணுகோபாலை பொதுச்செயலாளாராக முன்னிறுத்தியது வரை அனைவரும் நாம் அறிந்ததே.

2009 மற்றும் 2014 தேர்தலில் எம்.ஐ. ஷானவாஸ் வெற்றி பெற்றாலும், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளர்கள் (LDF) 42.31% மற்றும் 38.9% வரையில் வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இங்கு 10% அல்லது அதற்கும் குறைவான சதவீதத்திலேயே தான் பாஜகவிற்கு வாக்குகள் பதிவாகுவதால், பாஜகவை ஒரு போட்டியாளராகவே இங்கு எடுத்துக் கொள்ள இயலாது.

காங்கிரஸின் இந்த முடிவு குறித்து வியப்படைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் “காங்கிரஸ் தங்களுடைய செய்தியை நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறிவிட வேண்டும். இங்கு பாஜகவை எதிர்த்து போட்டியிட ராகுல் வரவில்லை. மாறாக இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்த்து போட்டியிடுகிறார் “ என்று கூறியிருந்தார்.

கேரள காங்கிரஸ் இரண்டாக பிரிவுபட்டுள்ளது. ஒன்று, முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலும், மற்றொன்று ரமேஷ் சென்னிதலா தலைமையிலும் இயங்கி வருவதால் ஏகப்பட்ட குழப்பங்கள் இங்கு நிலவி வருகின்றன.

வயநாட்டில் போட்டியிட உம்மன் சாண்டிக்கு மிகவும் நெருக்கமான டி.சித்திக்குக்கு வாய்ப்பளிக்கலாம் என்ற நிலையில் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார். இதனால் தேவையற்ற வீண் சச்சரவுகள் காங்கிரஸ் கட்சிக்குள் தவிர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wayanad Congress Candidate Rahul Gandhi - என்ன சொல்கிறது இடதுசாரி

இது தொடர்பாக சி.பி.ஐ கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளை மறைக்கவே இப்படி ஒரு நாடகம். ராகுல் காந்தியின் அஜெண்டா தான் என்ன ? பாஜகவை எதிர்ப்பதாக அவருக்கு எண்ணம் இருக்கிறதா இல்லையா? உம்மன் சாண்டி மற்றும் சென்னிதலாவின் லோகல் அஜெண்டாவை விட ஒருபடி மேலாக சென்று யோசிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதற்காக நாங்கள் கட்டாயமாக வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு சென்றுவிடமாட்டோம். ஏற்கனவே 50 பஞ்சாயத்து யூனிகளில் முதற்கட்ட பிரச்சாரம் முடிவு பெற்றுவிட்டது என்று கூறினார் அவர்.

என்னதான் காங்கிரஸ் கட்சியும் எல்.டி.எஃபும் அடித்துக் கொண்டாலும், 2004ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக முதல்முறையாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது இடதுசாரி அமைப்பு.

கேரளத்தில் ஒரு இடத்திலும் கூட காங்கிரஸ் வெற்றிபெறாத தேர்தலும் அந்த தேர்தலே என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு இப்படி இருக்க, மத்தியில் ஆட்சி அமைக்க உதவிய கட்சியை எதிர்த்தே மாநிலத்தில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி என்று கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

இதுவே ராகுல் காந்தி, கர்நாடகாவில் போட்டியிட்டிருந்தால் பாஜகவை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார் என்று இருந்திருக்கும். ஏன் என்றால் அங்கு மஜக + காங்கிரஸ் கூட்டணி பாஜகவை வெளியேற்ற மும்பரமாக வேலை செய்து வருகிறது.

Rahul Gandhi General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment