West Bengal Assembly election Mamtha Announced Candidate List : தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்க சட்டசபை தேர்தலில், 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டிலை முதல்வர் மம்தா பானர்ஜி அன்று அறிவித்துள்ளார்.
இந்த பட்டியலில், ஏராளமான இளம் பெண்கள் இடம்பெற்றுள்ள நிலையில், முதல் முறையாக உள்ளூர் பிரபலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட 291 வேட்பாளர்களில், 50 பெண்கள், 42 முஸ்லிம், 79 எஸ்சி மற்றும் 17 எஸ்.டி வேட்பாளர்களும், 68 இடங்களில், பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 294 இடங்களில் 291 இடங்கள் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், மீதமுள்ள மலைபிரதேசங்களான, குர்சியோங், டார்ஜிலிங் மற்றும் கலிம்பொங் ஆகிய மூன்று இடங்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறுகையில்,”கூட்டணி கட்சிகளக் போட்டியிடும் தொகுதிகளில், நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம், மற்ற தொகுதிகளில் அவர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள். காம்தாபுரி மற்றும் ராஜ்பன்ஷி தலைவர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர், ”என்று தெரிவித்துள்ளார். மேலும் 8 கட்டங்களாக நடைபெறும் மேற்குவங்க தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு, வரும் மார்ச் 27 ஆம் தேதியும், கடைசி கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறும். அசாம், கேரளா, தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் முடிந்து மே 2 ஆம் தேதி அனைத்து மாநில வாக்குகள் எண்ணப்படும்.