West Bengal assembly election 2021 Tamil News: தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்குவங்கத்தில் போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கவுள்ளது. இதனையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு வழங்கிய மம்தா, நாளை மே 5 அன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.
முன்னதாக திரிணாமுல் பவனில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை சந்தித்தார். அங்கு அவர் சட்டமன்ற கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆளுநரை சந்திப்பதற்கு முன் அவர் அளித்த பேட்டியில், "கொரோனா தொற்று காரணமாக, மே 5 அன்று நான் மட்டும் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தபின் மற்ற அமைச்சர்கள் பதவியேற்பார்கள்" என்று கூறினார்.
2024 ல் மக்களவை தேர்தலுக்காக பாஜக எதிர்ப்பு சக்திகளையும் பலப்படுத்துவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மம்தா, “நான் போராட்ட குணமுடையவள். 2024 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் மக்கள் ஒன்றாகப் போராட ஊக்கத்தை அளிக்கவே என்னால் முடியும். அந்த போரில் அனைவரும் சேர்ந்து தான் போராட வேண்டும்.
ஆனால் இப்போது நாம் கொரோனா தொற்றுடன் உடன் போராட வேண்டும். அதை நாம் முதலில் தோற்கடிக்க வேண்டும். மக்களவை தேர்தல் குறித்து பின்னர் நாம் விவாதிக்கலாம். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் ஒரு மாபெரும் பேரணியை நடந்த முடிவு செய்துள்ளோம். அது குறித்து பின்னர் அறிவிப்போம்.
மேலும் எங்களுக்கு போதிய தடுப்பூசிகள் கிடைக்கவில்லை, மறைமுகமாக சில மாநிலங்களுக்கு அதிகமான தடுப்பூசிகள் வழங்கபடுகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் இலவச தடுப்பூசிகளை வழங்க வேண்டும். ரூ .30,000 கோடி என்பது அரசிற்கு மிகப்பெரிய தொகை இல்லை. எனவே அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.